தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றம் தேவை! சிறு, குறு விவசாயிகள் தொடர் பாதிப்பு

0
87

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், அனைத்து சிறு, குறு விவசாயிகளும் பயன்பெறும் வகையில், திட்ட விதிமுறைகளில் மாற்றம் செய்ய வேண்டும் என, அனைத்து பகுதிவிவசாயிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், கிராமங்களில், விவசாயம் சார்ந்த பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

நீர்நிலைகளை துார்வாருதல், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பணிகளுடன், சிறு, குறு விவசாயிகளின் விளைநிலங்களிலும், வேலை உறுதி திட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

குறிப்பாக, விளை நிலங்களில் பாத்தி கட்டுதல், வரப்பு அமைத்தல் உள்ளிட்ட பணிகளால், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் என இரு தரப்பினரும் பயன்பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கடந்தாண்டு முதல் வேளாண் பணிகளில், வேலை உறுதி திட்டப்பணியாளர்களை நியமிப்பதில், அரசு புதிய நடைமுறையை செயல்படுத்தியது.

விவசாயிகள், அவர்களின் விளைநிலம் இருக்கும் ஊராட்சியிலேயே குடியிருப்பவராக இருக்க வேண்டும். அதற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்தால் மட்டுமே, வேலை உறுதி திட்டத்தில், பணியாளர்களை பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

அவ்வாறு இல்லாத பட்சத்தில், வேலை உறுதி பணியாளர்களை பயன்படுத்த அனுமதி மறுக்கப்படுகிறது.பல ஊராட்சிகளில், விவசாயிகளின் இருப்பிட பதிவு ஒருபக்கமும், அவர்களின் விளைநிலம் வேறு ஊராட்சிக்குட்பட்டதாகவும் இருக்கிறது.

இதனால், தற்போது வேளாண் பணிகளுக்கு வேலை உறுதி திட்ட பணியாளர்களை பயன்படுத்திக்கொள்ள முடியாமல் தொடர்ந்து சிக்கல் ஏற்படுகிறது. இந்த நடைமுறையால் வேளாண் பணி களுக்கு ஆட்கள் கிடைக்காமல் சிறு, குறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஊராட்சிகள் தரப்பிலும், வேலை உறுதி திட்டத்தில், கூடுதல் பணியாளர்கள் நியமிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. சில நேரங்களில், பணியாளர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் பாதிக்கின்றனர்.

இப்பிரச்னையால், விவசாயிகள், வேலை உறுதி திட்டப்பணியாளர்கள் என இருதரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.

ஒன்றிய அலுவலர்கள் கூறியதாவது: விதிமுறை மாற்றத்தால், விவசாயம் சார்ந்த பணிகள், தொடர்ந்து பாதிக்கப்படுவது குறித்தும், அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்.

அரசு விதிமுறைகளை மாற்றி அறிவித்தால், விவசாயிகள், தொழிலாளர்கள் என இரு தரப்பினரும் பயன்பெறுவார்கள். இவ்வாறு, தெரி வித்தனர்.