இளைஞர்களின் வளர்ச்சிக்கு நீட் தேர்வு தடையாக உள்ளது – காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி

0
105

பொள்ளாச்சியில் நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நீட் தேர்வு என்பது இளைஞர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. ஏற்கனவே மாணவர்கள் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பில் அரசு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். அதில் தேர்வாகி வந்த பிறகு மீண்டும் நீட் தேர்வு வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை. ஒரு திட்டம் கொண்டுவருவது என்பது தவறாக கூறமுடியாது. ஆனால், அந்த திட்டம் கொண்டுவந்த பிறகு அது சரியானதாக இல்லாவிட்டால் அதை திரும்பபெறவேண்டும். இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டம் இல்லாதபோது, ஒரே மாதிரியான தேர்வு முறை என்பது பொருந்தாது. நீட் தேர்வு தேவை இல்லை என மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

தமிழகத்தில் கடுமையான குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. குடிநீர் பிரச்சினையை தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் உள்ள ஏரி, குளம், குட்டைகளை தூர்வாரி ஆழப்படுத்தியிருக்க வேண்டும். நதிநீர் இணைப்பு என்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. ஒரே மாநிலத்தில் உள்ள நதிகளை இணைப்பது சாத்தியமானது. ஆனால், ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் நதிகளை இணைப்பதில் பிரச்சினைகள் ஏற்படும்.

அந்த மாநிலங்களின் அரசு மற்றும் பொதுமக்களிடம் ஒப்புதலை பெறுவது என்பது சிரமமானது. நிதின்கட்கரி நதிகள் இணைப்பு குறித்து பேசிவருகிறார். ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு நதிகளை இணைத்தால், அவரின் முயற்சி வரவேற்கத்தக்கது.

அனைத்து மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நாங்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் இல்லை. ஆனால், கட்டாயமொழி திணிப்பை ஏற்றுக்கொள்ளமுடியாது. மும்மொழி கொள்கையை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது. மொழி உரிமையை பாதுகாக்க நேருவும், இந்திராகாந்தியும் முன்வந்தனர்.

தென்னை விவசாயிகளை பாதுகாக்க அரசு விவசாயிகளுடன் கலந்து பேசி உரிய அளவு விலையை உயர்த்த வேண்டும். ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை அரசு விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை-பொள்ளாச்சி-திண்டுக்கல் இடையே அகல ரெயில் பாதை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். செயல்படாத தமிழக அரசை கொண்டு மக்களுக்கு எந்த பலனும் இல்லை. ராகுல்காந்தி தான் காங்கிரஸ் கட்சிக்கு தலைவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேட்டியின்போது தமிழக காங்கிரஸ் செயல் தலைவர்கள் மோகன்குமாரமங்கலம், மயூராஜெயக்குமார், கோவை தெற்கு மாவட்ட தலைவர் சக்திவேல், மாநில மகிளா காங்கிரஸ் துணைத்தலைவர் எஸ்.கவிதா, நகர தலைவர் ஆர்.எம்.அருள் உள்பட பலர் உடன் இருந்தனர்.