கோவை: ஒரே நாடு; ஒரே தேர்தல் பா.ஜ., கொண்டு வந்தால், அது எப்படி அம்பேத்கருக்கு எதிரானது?” என, பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
கோவை விமான நிலையத்தில், அண்ணாமலை அளித்த பேட்டி: உதயநிதி நடவடிக்கையை, தமிழக மக்கள் பார்த்துக் கொண்டு தான் உள்ளனர். ஒரு கேள்வி கேட்டால், ‘நான் சினிமா செய்தி பார்ப்பது கிடையாது’ என்கிறார். அமித்ஷா, பேச்சை திசை திருப்பி ஒரு ‘டிவிட்’ போடுகிறார்.
‘இந்தி தெரியாது போடா’ என, சொல்லும் உதயநிதிக்கு, அமித்ஷா இந்தியில் பேசியது பற்றி என்ன தெரியும்? துணை முதல்வரிடம் பணிவு இல்லை. காரில் அமர்ந்து கொண்டு, பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துகிறார். துணை முதல்வர் பத்திரிகையாளர்களை நடத்தும் விதம் மோசமாக உள்ளது.
பாட்ஷா ஊர்வலம்
‘அல் உம்மா’ என்பது, தடை செய்யப்பட்ட இயக்கம். கோவை குண்டு வெடிப்பு வழக்கில், பாட்ஷா பரோலில் வந்து இறந்தார். அவரது ஊர்வலத்தை கையாண்ட விதம் சரியானது அல்ல. பொறுப்பில் உள்ள அரசியல் தலைவர்கள், இன்னும் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். சீமான் இதை புரிந்து கொள்ள வேண்டும்.
குண்டுவெடிப்பால், கோவையின் வளர்ச்சி தடைபட்டுள்ளது. அது இன்னும் ஒரு வடுவாக இருக்கிறது. பா.ஜ., எப்போதும் இஸ்லாமியருக்கு எதிரானது கிடையாது. அங்குள்ள பயங்கரவாதத்தை தான் எதிர்க்கிறோம்.
பிரிவினைவாதத்துக்கு எதிராக உள்ளோம். தீவிரவாதம் ஒரு மதம் சார்ந்தது கிடையாது. இஸ்லாம் மதத்தை எப்போதும் கொச்சைப்படுத்தவில்லை. இறந்து போன மனிதருக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ, அதையும் கொடுக்கிறோம்.
ஆனால் ஊர்வலமாக நடத்தி, தியாகியை போல பட்டம் கொடுத்து, தி.மு.க., அரசியல் செய்ய நினைத்தால், கோவை மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். கோவையில் முழு அமைதி நிலவினால் தான், அது இழந்த பொலிவை மீட்க முடியும்.
அம்பேத்கரை அவமானப்படுத்தியது, மறந்தது, காங்கிரஸ் பிரதமர்கள். அவர்களுக்கே பாரத ரத்னா விருது கொடுத்துக் கொண்டது, ஆறு இடங்களை வாங்கி கவுரவித்தது, அம்பேத்கருக்கு பா.ஜ., அரசு செய்தது… என அமித்ஷா பட்டியலிட்டுள்ளார்.
அம்பேத்கருக்கு பல பரிணாமங்கள் உள்ளன. சட்டம் என்பது ஒன்று தான். பட்டியலினத்தவர்கள் கடைசியாக இருக்கும்போது, அதிகாரத்தில் உதயநிதி 3வது இடத்தில் உள்ளார். சமூகநீதியா இது?
பா.ஜ., பட்டியலினத்துக்கு எதிரி என, பிம்பத்தை கட்டமைத்துள்ளனர். அம்பேத்கருக்கு எதிராக காங்., போட்டியிடவில்லையா?; அவமானப்படுத்தவில்லையா?
கல்லுாரிகளில் கஞ்சா
சர்வதேச போதை கடத்தலுக்கு தலைமையாக இருக்கும் சாதிக் பாட்ஷா, தமிழ்நாடு பாடநுால் நிறுவனத்தின் பாட புத்தகத்தை, விநியோகிப்பவருக்கு விநியோகஸ்தர்.
எப்படி நம் ஊரில் கல்வி விளங்கும்? கோவை மாநகரில் எத்தனை கல்லுாரிகளில் கஞ்சா புழக்கம் உள்ளது என, செய்தி வெளியாகியுள்ளது. கோவைக்கு, என்.ஐ.ஏ., வர வேண்டும்; என்.சி.டி., வர வேண்டும். உள்துறை அமைச்சர் இதை கொண்டு வருவார்
த.வெ.க., அரசியலை உன்னிப்பாக பார்க்க வேண்டும். ஒரே நாடு; ஒரே தேர்தல் பா.ஜ., கொண்டு வந்தால், அது எப்படி அம்பேத்கருக்கு எதிரானது? அம்பேத்கர் கொண்டு வந்த சட்டத்தில் இது உள்ளது. 1967 வரை ஒரே நாடு; ஒரே தேர்தல் தான். எங்களிடம் குறை இருந்தால், சுட்டிக்காட்டுங்கள். திருத்திக் கொள்கிறோம்.
இவ்வாறு, அண்ணாமலை தெரிவித்தார்.