மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகையில் 123 அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் துவங்கப்பள்ளிகளில் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதனால் 14 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு புரியும் திறன் கற்பனை வளம் அதிகரித்துள்ளது. இதனால், மாணவர் வருகைப்பதிவும் உயர்ந்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் கற்றல், கற்பித்தலின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வரும் 2025ம் கல்வியாண்டில், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 8 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளும் பொருள் புரிந்து படிக்கவும், எண்மதிப்பு அறிந்து அடிப்படைக் கணக்குகளைச் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும், என்பது இதன் இலக்கு. காரமடை பள்ளிக் கல்வி வட்டாரத்தில், மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை பகுதிகளில் 123 அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் துவக்கப்பள்ளிகளில் இத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
அண்மையில், மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் எத்திராசர் துவக்கப்பள்ளியில் பல்வேறு தலைப்புகளின் கீழ் செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டு கண்காட்சி நடந்தது.
7 கண்டங்கள் தலைப்பின் கீழ் கோலமாவில் 7 கண்டங்கள் வரையப்பட்டது. அளவைகள் என்னும் தலைப்பில், தக்காளி, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், உப்பு, மிளகாய், முட்டைக்கோஸ், பிஸ்கட் போன்றவைகள் வைக்கப்பட்டு, தராசு வாயிலாக மாணவர்களால் மாணவர்களுக்கு அளந்து வழங்கப்பட்டது
விதை திருவிழா தலைப்பில், பூசணிக்காய், வெண்பூசணி, கத்தரிக்காய், வெண்டைக்காய், ராகி, கம்பு போன்றவற்றின் விதைகள் வைக்கப்பட்டு இருந்தது. அதே போல், உணவுத்திருவிழா, ஸ்டேசனரி, பொம்மைக்கடைகள் உள்ளிட்ட தலைப்புகளில், பொருட்களை விற்பனை செய்வது போல் செயல்பாடுகள் அமைந்திருந்தன.
மேலும், நேர்மைக்கு கிடைத்த பரிசு, பசுவுக்கு கிடைத்த நீதி, ஊர்த்திருவிழா என பல்வேறு தலைப்புகளில் கற்பித்தல் உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தது. இதை பார்வையிட்ட, காரமடை வட்டார கல்வி அலுவலர் ராஜேந்திரன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்த அப்பள்ளியின் ஆசிரியர்கள் சண்முகவடிவு, சாந்தி ஆகியோரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
இதுகுறித்து, காரமடை வட்டார வள மைய பயிற்றுநர் சுரேஷ் கூறுகையில், ”ஆசிரியர்கள் தங்களது சொந்த முயற்சியில் மாணவர்களின் ஒத்துழைப்போடு அனைத்து செயல்பாடுகளையும் அமைத்து, மாணவர்களுக்கு செயல் வழி கற்றல் வகுப்புகளை எடுக்கின்றனர்.
இதனால் மாணவர்களின் கல்வி தரம் உயர்ந்துள்ளது. சிந்திக்கும் திறன், புரியும் திறன் உயர்ந்துள்ளது. இதனால் வருகை பதிவு அதிகரித்துள்ளது. எதிர்காலத்தில் விஞ்ஞானிகள், மருத்துவர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு துறைகளில் இம்மாணவர்கள் தடம் பதித்து, சாதனை புரிவார்கள்,” என்றார்.