ஊருக்குள் புகுந்து கால்நடைகளை தாக்கும் சிறுத்தையை பிடிக்க கூண்டு; வனத்துறை நடவடிக்கை

0
118

கோவையை அடுத்த மதுக்கரை வனச்சரகம் காந்திநகர் பகுதியில் கடந்த சில தினங்களாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து உள்ளது. பெண் சிறுத்தை ஒன்று தனது 2 குட்டிகளுடன் சுற்றி திரிவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊருக்குள் புகுந்து வீட்டு வாசலில் கட்டியிருந்த 2 நாய்களை சிறுத்தை அடித்து கொன்று இழுத்து சென்றது. அதேபோல் 5-க்கும் மேற்பட்ட ஆடுகளையும் அடித்து கொன்றது. இரவு நேரங்களில் சிறுத்தையின் நடமாட்டம் இருந்தால் வீடுகளை விட்டு வெளியே வர பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.

மேலும் அங்குள்ள மலையில் குட்டிகளுடன் சிறுத்தை இருப்பதையும் சிலர் நேரில் பார்த்துள்ளனர். அவர்கள், கால்நடை மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேசன் உத்தரவின் பேரில் காந்திநகர் அருகில் வனப்பகுதியில் தற்போது சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர். அதற்குள் ஆடு கட்டி வைக்கப்பட்டு உள்ளது.

உள்ளே இருக்க கூடிய ஆட்டின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையில் கூண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், மக்களை அச்சுறுத்தும் சிறுத்தையை விரைவில் பிடிக்க உள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.