மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அறிவுசார் மையத்தில், மத்திய, மாநில அரசுகளின் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு துவங்க உள்ளது.
இப்பயிற்சி சேர விரும்பும் நபர்கள், இம்மாதம் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என நகராட்சி கமிஷனர் அறிவித்துள்ளார்.
மேட்டுப்பாளையம் மணி நகரில், நகராட்சி உயர்நிலைப்பள்ளி எதிரே, மேட்டுப்பாளையம் நகராட்சி நூலகம் மற்றும் அறிவு சார் மையம் உள்ளது. இந்த நூலகத்தில் போட்டி தேர்வுக்கான, 4000 புத்தகங்கள் மற்றும் இணையதள வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர்களும் உள்ளன. போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும், இங்கு செய்யப்பட்டுள்ளன.
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகள், பள்ளி மாணவர்களுக்கான அரசு தேர்வுகள் இயக்ககம் நடத்தும் திறனறிவு தேர்வுகள் மற்றும் மத்திய, மாநில அரசுகள் பொதுத்துறை நிறுவனங்கள் நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு, அறிவு சார் மையத்தில் இலவச பயிற்சியும், வழிகாட்டுதலும், மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. சிறந்த தன்னார்வ மிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
2025ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இந்த அட்டவணையில் உள்ள தேர்வுகளுக்கும், மற்ற மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் நடத்தும் தேர்வுகளுக்கும், சீருடை பணியாளர்கள் தேர்வுகளுக்கும், இலவச பயிற்சியும் வழிகாட்டுதலும், அறிவு சார் மையத்தில், 2025 ஜனவரி மாதம் முதல் வாரத்தில் துவங்க உள்ளது.
பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள நபர்கள், அறிவு சார் மையத்தில் வழங்கப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இம்மாதம், 31ம் தேதிக்குள் அறிவுசார் மையத்தில் வழங்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு அறிவு சார் மைய நூலகரை தொடர்பு கொள்ள வேண்டும்.
இந்த வாய்ப்பை இளைஞர்கள், மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு நகராட்சி கமிஷனர் அமுதா அறிக்கையில் கூறியுள்ளார்.