தோட்டப் பகுதியில் தனியாக வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை! விழிப்புணர்வுடன் இருக்க போலீசார் அறிவுரை

0
17

பெ.நா.பாளையம்: திருப்பூர் அருகே தோட்டத்தில் தனியாக இருந்த மூன்று பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதை அடுத்து, கோவை மாவட்டம் முழுவதும் தோட்டத்துப் பகுதியில் தனியாக வசிப்பவர்கள் எச்சரிக்கை உணர்வுடன் இருக்கும்படி போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலை கவுண்டன்பாளையம் கிராமத்தில் தோட்ட பகுதியில் தனியாக இருந்த வயதான தம்பதி மற்றும் அவருடைய மகன் ஆகியோர் கடந்த, 29ம் தேதி கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

அவர்கள் அணிந்திருந்த நகை, மொபைல் போன் ஆகியவை திருடப்பட்டிருந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் எச்சரிக்கை

இந்நிலையில் கிராமம் மற்றும் புறநகர் பகுதிகளில் தனியாக உள்ள தோட்டங்களில் வீடு கட்டி வசிப்பவர்களுக்கு போலீசார் எச்சரிக்கையுடன் கூடிய அறிவுரைகளை வழங்கி உள்ளனர்.

வயதானவர்கள் மற்றும் தோட்டத்தில் தனியாக தங்கி இருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தோட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து வரவேண்டும். சந்தேகப்படும் நபர்களின் நடமாட்டம் தெரிந்தால், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தோட்டத்தில் தனியாக உள்ளவர்கள் இரவில் தெளிவாக தெரியும் வகையில் ‘சிசிடிவி’ கேமராக்களை வீட்டைச் சுற்றிலும், வீட்டுக்குள்ளும் கண்டிப்பாக பொருத்த வேண்டும்.

‘சிசிடிவி’யின் காட்சிகளை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பார்க்கும் வண்ணம், அவர்களது மொபைல் போனில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

அது தொடர்பான காட்சி பதிவுகளை தானாக பதிவு செய்யும் வசதிகளை செய்து வைத்திருத்தல் நல்லது.

சைரன்கள்

தோட்டத்தில் கண்டிப்பாக சில நாய்களை வளர்க்க வேண்டும். தோட்டத்து வீட்டின் சுற்றுப்புறங்களில் இரவு நேரங்களில் மின் விளக்கை எரிய வைத்தல் நல்லது. மெயின் கேட், கதவு, ஜன்னல்களில் சைரன்களை பொருத்த வேண்டும்.

தோட்டத்து வீடுகளுக்கு அருகே நன்கு தெரிந்தவர்களை பாதுகாப்புக்காக குடி அமர்த்துதல் நல்லது. அவர்கள் வெளியூர் காரர்களாக இருந்தால், அவர்களைப் பற்றி நன்கு விசாரித்து, அவர்களின் ஆதாரங்களை வாங்கி வைத்திருக்க வேண்டும்.

அவர்கள் வெளி மாநிலத்தவர் என்றால், அவர்களின் ஆதார் அட்டை மற்றும் போட்டோக்களை பெற்று, அதன் நகல்களை அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் அளிக்க வேண்டும். பக்கத்து தோட்டங்களில் வசிப்பவர்களின் மொபைல் போன் எண்களையும் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் அதிகாரிகளின் மொபைல் எண்களையும் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

இரவு நேரங்களில் ரோந்து செல்லும் நெடுஞ்சாலை வாகன எண்களை தெரிந்து வைத்திருத்தல் நல்லது.

இரவு, 10:00 மணிக்கு மேல் தோட்டத்தில் நாய்கள் குறைக்கும் சத்தமோ, ஆடு, மாடுகளின் சத்தமோ கேட்டும் மற்றும் யார் கதவை தட்டினாலும் கதவை திறக்க கூடாது. உடனடியாக போலீசாருக்கும், அருகில் வசிப்பவர்களுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.வீட்டில் கண்டிப்பாக அதிக அளவு பணம், நகைகள், சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை வைத்திருக்கக் கூடாது.

அவற்றை வங்கி லாக்கர்களில் வைப்பது நல்லது. தோட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டாலும் தொடர்ந்து மின் சப்ளைக்காக யு.பி.எஸ்., வசதி இருத்தல் நல்லது.

தோட்டத்துக்கு வரும் தேங்காய் வியாபாரிகள், மஞ்சள் வியாபாரிகள், சோளத்தட்டு, நெல், கடலை, புகையிலை உட்பட அனைத்து வியாபாரிகளின் விபரங்களையும், அவர்கள் வரும் வாகனங்களையும் குறித்து வைத்துக் கொள்வது நல்லது.

மேற்கண்டவாறு, போலீசார் தெரிவித்தனர்.