தீயணைப்புத்துறை பணிச்சுமை ‘அணைக்க’ 100 கூடுதல் வீரர்கள்

0
13

கோவை; கோவை மாவட்டத்திற்கு சுமார் 100 தீயணைப்பு வீரர்கள் கூடுதலாக வரவுள்ளனர் என மாவட்ட அலுவலர் தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் கோவை தெற்கு, வடக்கு, கணபதி, பீளமேடு, அன்னுார், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மேட்டுப்பாளையம், வால்பாறை, சூலுார், பெரியநாயக்கன்பாளையம், தொடண்டாமுத்துார், கோவைப்புதுார் ஆகிய 13 இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. இதில் 250 வீரர்கள் உள்ளனர்.

வீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்து தர வேண்டும் என, மாவட்டத்தில் இருந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

கோவை மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் புளுகாண்டி கூறுகையில், ”இந்தாண்டு புதிதாக 650 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சென்னை, திருச்சி, திண்டுக்கல், சேலம் ஆகிய பகுதிகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சி நிறைவடைந்த பிறகு, வீரர்கள் மாவட்ட வாரியாக பணியமர்த்தப்படுவர். அதில் கோவை மாவட்டத்திற்கு சுமார் 100 வீரர்கள் வரவுள்ளனர்.

இவர்களை, மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு நிலையங்களின் தேவைக்கு ஏற்ப, அந்தந்த பகுதியில் உள்ள நிலையங்களில், பணியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் தற்போது உள்ள பணிச்சுமை குறையும்,” என்றார்.