ஆதிதிராவிடர் நல விடுதியில் அவலங்கள் ஆயிரம்! மாணவியர் நிலை பரிதாபம்

0
145

கோவை : ஒண்டிப்புதுார் ஆதிதிராவிடர் மாணவியர் நல விடுதியில், நிலவும் சுகாதாரமற்ற சூழலால் மாணவியர் நோய் பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். படிப்பில் கவனம் செலுத்த முடியாத சூழல் ஆண்டுக்கணக்கில் தொடர்கிறது.

கோவை மாவட்டத்தில், 30க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் மாணவ, மாணவியருக்கான நல விடுதிகள் உள்ளன. ஒண்டிப்புதுார், நெசவாளர் காலனியில், 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய விடுதி கட்டடம் மற்றும் தொடர்ந்து கட்டப்பட்ட புதிய கட்டடத்தில் பள்ளி, கல்லுாரியை சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட மாணவியர் தங்கியுள்ளனர். பழைய கட்டடம் பராமரிப்பின்றி மோசமான நிலையில் உள்ளது.

‘செப்டிக் டேங்க்’ நிரம்பி, துர்நாற்றம் வீசுவகிறது. கொசு, நோய்க்கிருமிகள் பெருகி வருவதால் மாணவியர், நோய் பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். தொட்டியின் மூடிகளும் உடைந்து, தகரம் வைத்து மூடப்பட்டுள்ளது. அருகேயே வேறுவழியின்றி மாணவியர் துணி துவைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர்.

சுற்றிலும் செடி, கொடிகளால் புதர்மண்டி பாம்பு உள்ளிட்டவற்றின் நடமாட்டத்துக்கு, மத்தியில் பயத்துடன் தங்கியுள்ளனர். இது போன்ற சுகாதாரமற்ற சூழலால், மாணவியர் படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை உள்ளது.

கடந்த செப்., மாதம் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, கோவையில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதிகளில் ஆய்வு செய்தார். பெயரளவுக்கு நடந்த ஆய்வு என்பதால், அனைத்து விடுதிகளிலும் ஆய்வு செய்யவில்லை. அவ்வாறு அவர் செல்லாமல் விட்ட விடுதிகளில், இந்த விடுதியும் ஒன்று.

சும்மா ஒரு ஆய்வு

ஆதிதிராவிடர் நல விடுதிகள் பராமரிப்பு குறித்து எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டிய நிலையில், நடப்பு, 2024-25ம் ஆண்டில் பழுது, பராமரிப்பு தேவைப்படும் விடுதிகளுக்கு, சிறப்பு பராமரிப்பு பணிகளுக்காக, ரூ.100 கோடி செலவிடப்படும் என, அமைச்சர் தெரிவித்திருந்தார். ஒண்டிப்புதுாரில் உள்ள மாணவியர் விடுதிக்கு, இதில் நிதி ஒதுக்கப்படவில்லை.

மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மணிமேகலையிடம் கேட்டபோது,”இந்த விடுதியை பராமரிப்பதற்கென்று, நிதி கோரவுள்ளோம். கிடைத்தவுடன், ‘தாட்கோ’ பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும். ஒரே வளாகத்தில் மூன்று விடுதிகளில், 150க்கும் மேற்பட்ட மாணவியர் உள்ளனர். கழிவுநீரும் செப்டிக் டேங்கினுள் செல்வதால், விரைந்து நிரம்பி விடுகிறது. அதை சரி செய்ய கூறியுள்ளோம்,” என்றார்.

கழிவுநீர் செல்வதால் தொட்டி அடிக்கடி நிரம்புவது தெரிந்தும், இதுவரை இதற்கு நிரந்தர தீர்வு காணாதது ஏன் என்பதே, மாணவியரின் கேள்வி.

பதிலளிப்பாரா ஆதி திராவிடர் நல அலுவலர்?