குளிர்காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது, குளிர்காலத்தில் நமக்கு ஏற்பட கூடிய நன்மைகள், தீமைகள் என்ன என்பது குறித்து, ஆயுர்வேத டாக்டர் விஜயப்பிரியா கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது:
நாம் அடுத்த மூன்று மாதங்கள் குளிர்காலத்தை, சந்திக்க உள்ளோம். அப்போது ஜீரண சத்தி உடலுக்கு நன்றாக இருக்கும். அதிக பசி எற்படும். நன்றாக சாப்பிடலாம். காலை எழும்போதே நன்றாக பசி ஏற்படும்.
அதற்கு காரணம் குளிர், உடலில் அதிகமான உஷ்ணத்தை ஏற்படுத்தும். அந்த உஷ்ணம் வயிற்றிலும் பிரதிபலிக்கும். அதே சமயம் உணவில் கவனம் தேவை.
மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க, ஆரோக்கியமான உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். மழை காரணமாக, வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.
தண்ணீரில் சீரகம், மிளகு, திப்பிலி, பட்டை சேர்த்து கொதிக்க வைத்து, குடித்தால் வயிற்றுக்கு நல்லது. ஜீரண சத்திக்கும் உதவும். குளிர் காலத்தில் தோல் பிரச்னை, மூட்டு வலி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
அதனை தடுக்க, நல்லெண்ணெய் குளியல் நல்லது. காலை நேர சூரிய ஒளியில் சிறிது நேரம் இருக்க வேண்டும். இந்த குளிர் காலத்தில், வரும் முன் காப்பது அவசியம். மாலை நேர பனியில் வெளிவே செல்வதை தவிர்க்க வேண்டும்.
முக்கியமாக குழந்தைகளை வெளியே அழைத்து செல்லக் கூடாது. மற்ற கால நிலையை விட தற்போது சளி பிடித்தால், குணமாக கால தாமதம் ஏற்படும். சளி பிடித்தால் பயப்பட வேண்டாம்.
துளசி, வெற்றிலை, கற்பூரவள்ளி ஆகியவற்றை தண்ணீரில் காய்ச்சி குடிக்கலாம். அல்லது அவற்றின் சாறை எடுத்து தேனில் கலந்து சாப்பிடலாம். இருமல், மலம் வழியாக சளி வந்து விடும்.
வீட்டு வைத்தியத்தில் குணமாகவில்லை என்றால், டாக்டரை அணுக வேண்டும். முக்கியமாக, குளிர்ந்த உணவு தவிர்க்க வேண்டும். பழ வகைகள், பப்பாளி, வைட்டமின் ‘சி’ உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
தண்ணீரில் வேலை செய்யும் போது, விரல் இடுக்குகளில் புண் வரலாம். அதனால் விரல்களை நன்றாக கழுவி, ஈரப்பதம் இல்லாமல் வைத்துக் கொள்ள வேண்டும்.
அதேபோல, குழந்தைகள் பள்ளிகளில் அதிக நேரம் சாக்ஸ் அணிந்திருப்பதால், வீட்டிற்கு வந்ததும் அவர்களது கால்களை கழுவி, சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.