ரயில்வே ஸ்டேஷனில் 90 சதவீதம் மேம்பாலம் பணிகள் நிறைவு

0
60

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனில், பிளாட்பார்ம் மேம்பாலப் பணிகள், 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது

கோவை – திண்டுக்கல் வழித்தடத்தில், கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது. நீண்ட துாரம் செல்லும் மக்கள் பெரும்பாலும் ரயிலேயே பயன்படுத்துகின்றனர். இதனால், அவர்களது பயணம் வசதியாக உள்ளது.

கோவை அருகே அமைந்துள்ளகிணத்துக்கடவு, ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் பயணியர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஸ்டேஷனில் இரண்டு பிளாட்பார்ம்களிலும் ரயில் நின்று பயணியரை ஏற்றி இறக்கி செல்கிறது.

இரண்டாவது பிளாட்பாரத்தில் இறங்கும் ரயில் பயணியர் பலர், தண்டவாளத்தில் இறங்கி கடந்து, முதல் பிளாட்பாரத்தில் ஏற வேண்டிய சூழ்நிலை இருந்தது. இதில் சில பயணியர் தாங்கள் கொண்டு வரும் லக்கேஜ்களை சேர்த்து எடுத்து செல்ல சிரமப்படுகின்றனர்.

பயணியர் நலன் கருதி இரண்டு பிளாட்பார்ம்களையும் இணைக்கும் வகையில், பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிகள், 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. விரைவில் பயன்பாட்டிற்கு விடப்படும். இதன் வாயிலாக, பயணியர் இனி ரயில்வே தண்டவாளத்தில் இறங்கி பிளாட்பார்ம் மாறி செல்லும் நிலை ஏற்படாது.

ரயில் பயணியர் கூறியதாவது: ரயில்வே ஸ்டேஷன் துவங்கிய காலம் முதல், தற்போது வரை ஒரு பிளாட்பார்மில் இருந்து மற்றொரு பிளாட்பார்முக்கு தண்டவாளத்தில் இறங்கி கடந்து சென்று வருகிறோம். இதனால் வயதானவர்கள் சிலர் தடுமாறி செல்லும் நிலை உள்ளது.

தற்போது, பாலம் பணிகள் நிறைவடையும் தருவாயில் இருப்பதால், இனிமேல் எளிமையாக சென்று வரலாம். மேலும், ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் இலவச வைபை வசதி தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால், பயணியருக்கு வசதியாக உள்ளது.

இவ்வாறு, கூறினர்.

ரயில்வே அதிகாரிகள் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.