தயாராகுது புதிய வழிகாட்டு நெறிமுறைகள் : கூரியரில் வருது போதை பொருட்கள்

0
98

கோவை : கூரியரில் வரும் பார்சல்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வரையறுக்கும் பணியில், கோவை மாநகர போலீசார் இறங்கியுள்ளனர்.

சமீப காலமாக, மாநிலத்தில் போதை பொருட்களின் புழக்கம், பயன்பாடு அதிகரித்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்குள் வரும் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வந்தாலும், புதுப்புது வழிகளில் கடத்தி வருகின்றனர்.

ஆரம்ப காலத்தில் வெளி மாநிலங்களுக்கு சென்று ரயில் மற்றும் பஸ்களில் கஞ்சா கடத்தி வந்தனர். பின், காய்கறி வண்டிகளில் கடத்தினர். தற்போது, ஆன்லைன் டெலிவரி, கூரியர், தபால் வாயிலாக கஞ்சா, போதை மாத்திரை உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

‘இந்தியா போஸ்ட்’ வாயிலாக நாகாலாந்தில் இருந்து கஞ்சா கோவைக்கு கடத்தப்படுவதையும், இந்தியா மார்ட் நிறுவனம் வாயிலாக ஆன்லைனில் போதை மாத்திரைகளை வாங்குவதையும், கோவை போலீசார் கண்டுபிடித்தனர். கடத்தலில் ஈடுபட்டோரை கைது செய்தனர்.

இதேபோல், மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் போதைப் பொருள் கடத்தல் நடக்கிறது. வெளி மாநிலங்களில் இருந்து போதைப் பொருட்களை வாங்க இணையவழியை எளிமையாக பயன்படுத்துகின்றனர்.இதை தடுக்கும் வகையில், ஆன்லைன் டெலிவரி, இந்தியா போஸ்ட், கூரியர் நிறுவனங்களில் வரும் பார்சல்களுக்கு எஸ்.ஓ.பி., எனும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கொண்டு வர, தமிழக போலீசார் திட்டமிட்டுள்ளனர். பார்சலில் சட்ட விரோத பொருட்கள் வந்தால் கண்டுபிடித்து அதை அனுப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆன்லைனில் கடத்தப்படும் போதைப்பொருட்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்வதில் கோவை போலீசார் திறம்பட செயல்பட்டு வருகின்றனர். இதனால், வழிகாட்டு நெறிமுறைகளை தயார் செய்யும் பணி, கோவை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் வரும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் கூரியர் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி நெறிமுறைகள் கொண்டு வரப்படும். அவற்றை தமிழகம் முழுதும் செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது’ என்றார்.