கோவை; பாரதியின் கனவு, 51 சதவீதமே நிறைவேறி உள்ளது என பட்டிமன்றத்தில், கவிஞர் கவிதாசன் தீர்ப்பு வழங்கினார்.
கோவை சுங்கம் நிர்மலா மகளிர் கல்லுாரியில் பாரதியார் பிறந்த நாளையொட்டி தமிழ்த்துறை, சிந்தனைக் கவிஞர் கவிதாசன், வானொலி மாமணி கமலநாதன் அறக்கட்டளை ஆகியவை இணைந்து, ‘பாரதியின் கனவு நிறைவேறி விட்டது, நிறைவேறவில்லை’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் ஐ.ஜி., முத்துசாமி கலந்து கொண்டார்.
பட்டிமன்ற நடுவராக கவிதாசன் இருந்தார். ‘பாரதியின் கனவு நிறைவேறி விட்டது’ என்ற தலைப்பில் மாணவிகள் பவிஷா, யாழினி, ஆமினா ஆகியோரும், ‘நிறைவேறவில்லை’ என்ற தலைப்பில் யோகஸ்ரீ, ரிதிமரியா, ஜோஆன் ஆகியோரும் பேசினர்.
நடுவர் கவிதாசன் தீர்ப்பு வழங்கி பேசுகையில், “சாதியோடு இல்லாமல் சாதிக்க வேண்டும். நாம் நடுத்தரம் என்று இல்லாமல் சரித்திரத்துடன் வாழ வேண்டும். பாரதியின் கனவுகளை சொல்லி கொண்டே போகலாம். அதில் அரசியல், பெண் விடுதலை, கல்வி சிந்தனை, தொழில் ஆகியவற்றில் முன்னேறி செல்கிறோம். பெண்கள் போலீஸ், ராணுவம் என அனைத்து துறைகளிலும் சாதிக்க துவங்கி விட்டனர். தொழில் திறன், அறிவு வளர்ந்து உள்ளது. இரு தரப்பினரின் வாதத்தை வைத்து பார்க்கும் போது பாரதியின் கனவு, 51 சதவீதம் நிறைவேறி விட்டது. 49 சதவீதம் நிறைவேறவில்லை,” என்றார்.
உலகளாவிய பார்வை
முன்னாள் ஐ.ஜி., முத்துசாமி பேசியதாவது:பாரதி மறைந்து பல ஆண்டுகளாகியும் அவரை நினைத்து கொண்டு பெருமையாக பேசுகிறோம். காரணம், அவரது பார்வை உலகளாவிய பார்வை. உலகில் உள்ள அனைத்து ஜீவன்களையும் நேசித்தார். கசாப்பு கடையில் இருந்து மீட்டு வந்த ஆட்டுக் குட்டிக்கு ராதா என பெயர் வைத்து, அதன் குணாதிசயங்களையும் பார்த்து கவிதையாக வெளிப்படுத்தினார். பாரதியார் ஏழை மக்களின் பாடகராக இருந்தார். அவர் வாழ்ந்த காலம், 38 வருடங்கள். அதில், 14 வருடங்களே கவிஞராக இருந்தார். அந்த குறுகிய காலத்தில் பலவற்றை சாதித்து விட்டார்.இவ்வாறு அவர் பேசினார்.