கோவையில் துாறல் மழை : சட்டென்று மாறிய வானிலை

0
15

கோவை; கோவையில் நேற்று காலை முதலே நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

வடகிழக்குப் பருவமழை சராசரி அளவைத் தாண்டி பதிவாகி வரும் நிலையில், கோவையில் கடந்த சில நாட்களாக மழை இன்றி, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

ஓரிரு நாள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று காலை முதல் கோவை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பதிவானது. காலை முதல் இரவு வரை மேகமூட்டம் காணப்பட்டது. இதனால் வெயில் சிறிதுமின்றி, சில்லென்ற பருவநிலை நிலவியது.

இன்று வெள்ளிக்கிழமை மாவட்டம் முழுதும் பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக, கோவை வேளாண் காலநிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆனைமலையில் 21.4 மி.மீ., அன்னூர் 20.2, காரமடை 22.8, கிணத்துக்கடவு 19.8, மதுக்கரை 12.7, பெ.நா.பாளையம் 18.6, பொள்ளாச்சி தெற்கு மற்றும் வடக்கு 24.6, சர்க்கார் சாமக்குளம் 15.4, சுல்தான்பேட்டை 25.3, சூலூர் 16.8, தொண்டாமுத்தூர் 11.2 மி.மீ., மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளையும் மிதமான மழை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.