கோவை; லண்டனில் நடந்த மாரத்தானில் முதல் பரிசை தட்டிய கோவை வீரருக்கு, பாராட்டு தெரிவித்த சக வீரர்கள், பயிற்சியின் இடையே ‘கேக்’ வெட்டி கொண்டாடினர்.
கோயம்புத்துார் பாய்ஸ்ரஸ் ரன்னர்ஸ் கிளப் நிறுவனர் வேலாயுதம்,47 லண்டனில் உள்ள ரிச்மண்ட் பார்க்கில், 45 வயதுக்கும் மேற்பட்டோர் பிரிவில் நடந்த, 21.1 கி.மீ., அரை மாரத்தான் போட்டியில், 1 மணி நேரம், 31 நிமிடம், 54 வினாடிகளில் கடந்து முதல் பரிசை தட்டியுள்ளார்.
அதேபோல், சுசெக்ஸ் பகுதியில் நடந்த முழு மாரத்தானில்(42.192 கி.மீ.,), 3 மணி நேரம், 8 நிமிடங்கள், 49 வினாடிகளில் கடந்து, 5வது இடம் பிடித்துள்ளார்.
இதையடுத்து, மற்ற ஓட்டப்பந்தய வீரர்களுக்கும் உந்துதலாக இருக்கும் வகையில், ரேஸ்கோர்ஸ் பகுதியில் நேற்று காலை பயிற்சிக்கு மத்தியில், அவருக்கு பாராட்டு விழா நடந்தது.
வீரர் வேலாயுதம், இரு மாரத்தானிலும் ஓடும் புகைப்படம், கடந்த நேரம் ஆகியவை இடம்பெற்ற ‘கேக்’களை வெட்டி கொண்டாடினர்.
அப்போது, பேசிய ரன்னர்ஸ் கிளப் தலைவர் ரமேஷ்,”இது சாதாரண வெற்றி அல்ல. கடும் பயிற்சிக்கு பிறகு கிடைத்த வெற்றி.
அவரது தொடர் பயிற்சியே மிகப்பெரிய சாதனையாக மாறியுள்ளது.
வரும் காலங்களில் இன்னும் குறுகிய நேரத்தில் கடந்து, மாரத்தானில் சாதனை புரிய வேண்டும்,” என்றார்.கிளப் பொருளாளர் வேதநாயகம், ஒருங்கிணைப்பாளர் சண்முகம், கோவை மாவட்ட தடகள சங்க தொழில்நுட்ப தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.