கோவை; ஆட்கள் ஏற்றுவதில் ஏற்பட்ட பிரச்னையில், பஸ்களை சாலையில் நிறுத்தி தகராறு செய்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பஸ்சில் ஆட்கள் ஏற்றிச்செல்வதில் தனியார் பேருந்துகளுக்கு இடையே போட்டி நடக்கிறது. சில நேரங்களில் இது தகராறாக மாறுகிறது. நேற்று சப்தகிரி (தடம் எண் எஸ்11) பஸ் சிங்காநல்லுாரில் இருந்து காந்திபுரம் நோக்கி, அவிநாசி சாலையில் சென்று கொண்டிருந்தது.
அதே வழியில் சிட்ராவில் இருந்து காந்திபுரம் நோக்கி 28 தடம் எண் கொண்ட வி.கே.வி., என்ற தனியார் பஸ்சும் சென்றது. அப்போது, இரு பேருந்துகளில் நடத்துனர்கள் இடையே ஆட்கள் ஏற்றுவதில் தகராறு ஏற்பட்டது.
இதனால், அவிநாசி சாலை, நவ இந்தியா அருகில் இரு பஸ்களையும் சாலையில் நிறுத்திவிட்டு நடத்துனர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொது மக்கள் அவதியடைந்தனர்.
தகவல் கிடைத்த போக்குவரத்து போலீசார், சம்பவ இடத்துக்கு வந்தனர். போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த இரண்டு பஸ்கள் மீதும், வழக்கு பதிவு செய்தனர்.