கோவை; பொதுமக்களிடம் குறைகேட்கும் கூட்டம், கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர், 53 மனுக்கள் பெற்று, துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைத்தனர்.
சாலையை சீரமையுங்க!
இந்திய கம்யூ., முன்னாள் கவுன்சிலர் புருஷோத்தமன் தலைமையில், வெங்கிட்டாபுரம் பூபேஸ் குப்தா நினைவு மன்ற நிர்வாகிகள் கொடுத்த மனுவில், ’43வது வார்டில், மாநகராட்சிக்குச் சொந்தமான, 25 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு இடங்கள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன; அவற்றை மீட்க வேண்டும். வெங்கிட்டாபுரம், வேலாண்டிபாளையம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலைகள், குடிநீர் குழாய் பதிக்கவும், பாதாளச் சாக்கடை இணைப்பு கொடுக்கவும் தோண்டியதால், குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துக்கு உள்ளாவதால், சாலையை சீரமைத்து தர வேண்டும்’ என கூறியுள்ளனர்.
ஊற்று நீரால் அவதி
மாநகராட்சி, 88வது வார்டு பொதுமக்கள் கொடுத்த மனுவில், ‘அர்ச்சனா நகர் குடியிருப்புக்கு அருகாமையில் குளம் இருக்கிறது. இரு மாதங்களாக, இப்பகுதியிலும், சாலையிலும் குளத்தின் ஊற்று நீர் அதிகமாக தேங்கியுள்ளது. வீட்டுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. துர்நாற்றம், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது; கொசுத்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்பகுதியினர் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். தேங்கியுள்ள ஊற்று நீரை வேறு வழித்தடத்தில் கொண்டு செல்ல வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
குப்பை கொட்டக்கூடாது!
கே.கே.புதுார் குடியிருப் போர் நலச்சங்கத்தினர் கொடுத்த மனுவில், ‘கவுண்டம்பாளையத்தில் செயல்பட்ட குப்பை கிடங்கு, அப்பகுதி மக்களின் எதிர்ப்பால், 2002ல் மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, வெள்ளலுாருக்கு மாற்றப்பட்டது.
கடந்த இரு ஆண்டுகளாக மீண்டும் இப்பகுதியில் குப்பை கொட்டப்படுகிறது. ஈ தொல்லையால் நோய் தொற்று பரவுகிறது; கடுமையான துர்நாற்றம் வீசுவதால் சுவாசக் கோளாறு ஏற்படுகிறது. அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்து, குப்பை கொட்டுவதை நிறுத்த உத்தரவிட்டார்.
இப்போது மீண்டும் கொட்டப்படுகிறது. 2002ல் நடந்தது போல் போராட்டம் நடத்தும் நிலைமைக்கு எங்களை தள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம்’ என கூறியுள்ளனர்.
ரோடு ரொம்ப மோசம்
எமாமி ஏரோசிட்டி வெல்பேர் அசோசியேசன் சார்பில் கொடுத்த மனுவில், ‘நாங்கள் வசிக்கும் பகுதி மொத்தம், 62.38 ஏக்கர் பரப்பு கொண்டது; 910 மனைகள் உள்ளன. அணுகுசாலையாக உள்ள, 40 அடி ரோடு கடந்த மழையின்போது சேதமாகி விட்டது. அலுவலகம், பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்வோர் பலரும் இச்சாலையை பயன்படுத்துவதால், விரைந்து செப்பனிட்டுத் தர வேண்டும். சாலை ஓரம் பலரும் வீசிச்செல்லும் குப்பையை, வாரம் ஒருமுறை சுத்தம் செய்து தர வேண்டும்’ என கூறியுள்ளனர்.
வேகத்தடை அவசியம்
மக்கள் நீதி மய்யம் கிழக்கு மண்டலம் சார்பில் கொடுத்துள்ள மனுவில், ‘உக்கடம் பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து பஸ்கள் வெளியே வரும் பகுதியில், சுங்கம் செல்வதற்கான வாகனங்கள் நெரிசலுக்கு உள்ளாகின்றன.
சுங்கத்தில் இருந்து உக்கடம் நோக்கி, வாகனங்கள் வேகமாக வருவதால், விபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது.
முக்கோணமாக சந்திக்கும் அப்பகுதியில், வேகத்தடை அமைக்க வேண்டும்’ என கூறியுள்ளனர்.