வங்கி கணக்கை மோசடிக்கு கொடுத்த ஒசூர் நபர் கைது

0
19

கோவை:கோவை, பேரூர் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் யோகசந்திரன், 59. இவர் பங்கு சந்தையில் வர்த்தகம் மேற்கொண்டு வந்துள்ளார். இவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், தாங்கள் கூறும் நிறுவனங்களின் பங்குகளை வாங்கினால், பல மடங்கு லாபம் பார்க்கலாம் என தெரிவித்தார்.

இதை நம்பிய யோகசந்திரன், அவர் தெரிவிக்கும் நிறுவனங்களின் பங்குகளை வாங்கினார். ஆரம்பத்தில் சிறிது லாபம் கிடைத்தது. இதனால், சிறிது, சிறிதாக 10.96 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி நபர்கள் கொடுத்த வங்கி கணக்குகளுக்கு அனுப்பினார்.

இவரது பணம், செயலியில் வரவு வைக்கப்பட்டு, 1 கோடியே 17 லட்சம் ரூபாய் பணம் இருப்பது போல் காட்டியது. பணத்தை யோகசந்திரன் எடுக்க முயற்சித்தபோது முடியவில்லை.

இது குறித்து யோகசந்திரன் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், ஒசூரை சேர்ந்த மாதப்பன், 39, என்பவரின் வங்கி கணக்கிற்கு பணம் சென்றது தெரியவந்தது.

மாதப்பன், இரண்டு நிறுவனங்களின் பெயரில், பல்வேறு வங்கிகளில் 10 கணக்குகள் துவங்கி, அவற்றை மோசடி நபர்களுக்கு கொடுத்து, கமிஷன்பெற்று வந்தது தெரியவந்தது. மாதப்பனை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.