பொள்ளாச்சி; நெல் ஜெயராமன் நினைவு தினத்தை முன்னிட்டு, காவேரி கூக்குரல் இயக்கம் வாயிலாக திவான்சாபுதுாரில் 4 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
ஈஷா யோகா மையத்தின் ஓர் அங்கமான காவேரி கூக்குரல் இயக்கம், தமிழகத்தின் பசுமை பரப்பை அதிகரிக்க, மரக்கன்றுகள் நடும் பணியை மேற்கொண்டு வருகிறது.
நெல் ஜெயராமன் நினைவு தினத்தை முன்னிட்டு, விவசாயிகளின் பங்களிப்போடு, 28 மாவட்டங்களில், 38 விவசாய நிலங்களில், 251 ஏக்கர் நிலப் பரப்பில் மொத்தம், 74,615 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
அதன்ஒருபகுதியாக, பொள்ளாச்சி அருகே உள்ள திவான்சாபுதுாரில், கார்த்திகேயன் என்பவரது தோட்டத்தில், 15 ஏக்கர் பரப்பில், 4 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
காவேரி கூக்குரல் இயக்கத்தினர் கூறியதாவது: பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த ஜெயராமனின் நினைவு நாள், டிச., 6ம் தேதி, சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் கொண்டாடப்படுகிறது.
நெல் ஜெயராமன், ‘நமது நெல்லை காப்போம்’ இயக்கத்தின் வாயிலாக பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுப்பதிலும், பாரம்பரிய விவசாயத்தை பரவலாக்குவதிலும் தீவிரம் காட்டியவர்.
ஆரம்ப கட்டத்தில், நம்மாழ்வாரின் டெல்டா மாவட்ட சுற்றுப்பயணங்களில் இணைந்து பணியாற்றியவர். அவரது சீரிய முயற்சியால், 174 பாரம்பரிய நெல் ரகங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
அவர், ஈஷாவின் விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் நிகழ்வுகளில் அதிக ஈடுபாடு கொண்டவர். ஈஷாவின் ஆரம்ப கட்ட இயக்கமான பசுமைக் கரங்கள் திட்டத்துடன் இணைந்து, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிம்பர் மரக்கன்றுகளை உருவாக்கி விவசாயிகளுக்கு வழங்கினார்.
அவரின் எண்ணங்களை நடைமுறைப்படுத்தும் விதமாக, ஈஷா மரக்கன்றுகள் நடும் பணியையும், இயற்கை விவசாயப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள, 50 ஈஷா நர்சரிகள் வாயிலாக, தலா ஒரு டிம்பர் மரக்கன்று 3 ரூபாய் என, விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மரக்கன்றுகள் பெறுவதற்கு, 80009 80009 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்