இம்மாத இறுதிக்குள் பணிகளை துவங்க திட்டம் : மேற்கு புறவழிச்சாலைக்காக கட்டடங்கள் இடிப்பு துவங்கியாச்சு

0
19

பொள்ளாச்சி ; பொள்ளாச்சி மேற்கு புறவழிச்சாலை திட்டப்பணிகள் இன்னும் துவங்கப்படாத நிலையில், அதற்காக கையப்படுத்தப்பட்ட நிலத்தில் உள்ள கட்டடங்களை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை (திட்டங்கள்) அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

பொள்ளாச்சி நகரில் நிலவும் நெரிசலை கட்டுப்படுத்த, மேற்கு புறவழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த சாலை, கோவை ரோடு ஆச்சிப்பட்டி சக்தி மில் அருகே துவங்கி, சங்கம்பாளையம், ஆர்.பொன்னாபுரம், தாளக்கரை, ஜமீன்முத்துார், நல்லுார் வழியாக, ஜமீன் ஊத்துக்குளி கைகாட்டி வரை, 8.9 கி.மீ., துாரத்துக்கு, 10 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படுகிறது.

ரோட்டின் இருபக்கமும், மூன்று மீட்டருக்கு மழைநீர் வடிகால் அமைக்கப்படுகிறது. இந்த புறவழிச்சாலை பணிக்காக, விவசாயிகள் உள்ளிட்ட தனியாரிடம் இருந்து, 34,718 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

மொத்தம், 73.35 கோடி ரூபாய் நிதியில் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த, 2021ம் ஆண்டு திட்டப் பணிகள் துவங்கி, நான்கு மாதங்கள் சுறுசுறுப்பாக நடந்தது. அதன்பின், பணிகள் மந்தமாக நடைபெற்றது. இப்பணிக்காக, 171 மரங்கள் வெட்டப்பட்டன.

மேலும், மேற்கு புறவழிச்சாலை பணிக்காக, ஜமீன் ஊத்துக்குளியில் இருந்து, கோவை ரோடு ஆ.சங்கம்பாளையம் வரை, நான்கு கி.மீ., துாரத்துக்கு பழைய குழாய்களுக்கு மாற்றாக, ஐந்து கோடி ரூபாய் செலவில் புதிய குடிநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதன்பின், மீண்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

புறவழிச்சாலை பணி துவங்கியதில் இருந்து, இரு முறை பல மாதங்கள் இடைவெளி விடப்பட்டது. இதனால், இந்த பணி நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆர்.பொன்னாபுரம் ரோடு ஜல்லிக்கற்கள் பரப்பிய நிலையில் படுமோசமாக உள்ளது.

இப்பணிகள் முழுமை பெறாத நிலையில், கிராம மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். இவ்வழியாக செல்லும் மாணவ, மாணவியர், வேலைக்கு செல்வோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இவ்வழியாக பள்ளி வாகனங்கள் வர மறுப்பதால் பள்ளி மாணவர்கள், ஆர்.பொன்னாபுரம் பிரிவுக்கு நடந்துசெல்கின்றனர்.ஜமீன் ஊத்துக்குளி கிருஷ்ணா குளம் செல்லும் ரோடும் குண்டும், குழியுமாக உருமாறி விபத்துக்கு அச்சாரம் போடுகிறது.

இதுகுறித்து, பலமுறை விவசாயிகள், பொதுமக்கள் புகார் கொடுத்தும் பணிகள் துவங்கப்படவில்லை. அதிகாரிகளிடம் கேட்டால், மேற்கு புறவழிச்சாலை திட்டப்பணிகள் மேற்கொள்ள டெண்டர் எடுத்தவருக்கு மாற்றாக, புதிய நபருக்கு டெண்டர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கும், என்ற ஆறுதல் வார்த்தைகள் மட்டுமே கூறப்படுகிறது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில், ஆறுதல் அளிக்கும் வகையில், மேற்கு புறவழிச்சாலை பணிக்காக தற்போது கட்டடம் இடிக்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதனால், ரோடு போடும் பணிகள் விரைவில் துவங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

புதிதாக டெண்டர் விட்டாச்சு!

பொதுமக்கள் கூறுகையில், ‘மேற்கு புறவழிச்சாலை பணிகள் பாதியிலேயே நிற்பதால், ரோடுகள் குண்டும், குழியுமாக உருமாறி விபத்துகளை ஏற்படுத்துகிறது. தற்காலிகமாக ‘பேட்ச் ஒர்க்’ கூட நடக்காததால் விபத்துகள் ஏற்படுவது சர்வசாதாரணமாகி விட்டது.மூன்று ஆண்டுக்கு பின் தற்போது, மீண்டும் நிலம் கையகப்படுத்திய பகுதிகளில் உள்ள கட்டடங்களை இடித்து அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளது நம்பிக்கை அளிக்கிறது. விரைவில் பணிகளை துவங்கி முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்,’ என்றனர்.நெடுஞ்சாலைத்துறை (திட்டங்கள்) அதிகாரிகள் கூறுகையில், ‘மேற்கு புறவழிச்சாலை திட்டப்பணிகள் மேற்கொள்ளபுதிய நபருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் பணிகளை துவங்க திட்டமிட்டுள்ளோம்,’ என்றனர்.