சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை : 60 ரயில்களுக்கு ‘கரென்ட் புக்கிங் ‘ நடைமுறை நீட்டிப்பு

0
17

கோவை; ரயில் புறப்படும் முன் டிக்கெட் பெற்று பயணிக்கும், ‘கரென்ட் புக்கிங்’ முறையை, 60 ரயில்களில் நீட்டித்து சேலம் கோட்ட ரயில்வே துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

பண்டிகை காலங்களில் நெடுந்துார பயணத்துக்கு ஏற்ற, பொதுப்போக்குவரத்தாக ரயில்கள் உள்ளன. இப்பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை, ரயில்வே நிர்வாகம் ஏற்படுத்தி வருகிறது. காகிதம் இல்லா டிஜிட்டல் டிக்கெட்கள், டிக்கெட் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, ‘கரென்ட் புக்கிங்’ நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, ரயில் புறப்படும் இறுதி கட்டத்தில், பயணம் செய்ய விரும்பும் பயணிகள், ரயில்களில் காலியாக உள்ள இருக்கைகளை ‘புக்’ செய்து பயணிக்க முடியும்

ரயில் புறப்படுவதற்கு, நான்கு மணி நேரத்துக்கு முன் வெளியிடப்படும் பயணப்பட்டியலின் அடிப்படையில் கரென்ட் புக்கிங் வாயிலாக டிக்கெட் எடுக்க முடியும். சேலம் கோட்ட ரயில்வே துறையில் கடந்தாண்டில், 28 ரயில்களில் இந்நடைமுறை ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், நடப்பாண்டில், 60 ரயில்களில் கரென்ட் புக்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சேலம் ரயில்வே கோட்ட ரயில்வே துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ”திருப்பூர், ஈரோடு, சேலம், மொரப்பூர், கரூர், ஆத்துார் உள்ளிட்ட பல்வேறு ரயில்வே ஸ்டேஷன்களில், ரயில் பயண அட்டவணையில் இருக்கை இருந்தால், ஐந்து நிமிடங்களுக்கு முன் வரை, கரென்ட் புக்கிங் வாயிலாக டிக்கெட் எடுக்கலாம்.

இந்தாண்டு, சேலம் கோட்டத்துக்குட்பட்ட ரயில்வே ஸ்டேஷன்களை கடந்து செல்லும், 60 ரயில்களில் இம்முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, இருக்கை இருப்பின் ரயில் புறப்படும் ஐந்து நிமிடங்களுக்கு முன் வரை, முன்பதிவு செய்து பயணிகள் சிரமமின்றி பயணிக்கலாம்,” என்றார்.