தமிழ்நாடு உழவர் பேரியக்கம் கண்டனம் : முதல்வர், அமைச்சர்கள் ‘போட்டோ ஷுட்

0
88

கோவை : ”புயல் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வரும், அமைச்சர்களும், நிவாரணப் பொருட்கள் கொடுத்து போட்டோ ஷுட் நடத்துவது சரியல்ல,” என, தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநிலச் செயலாளர் வேலுச்சாமி கூறினார்.

திருவண்ணாமலையில் நடக்க உள்ள தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில மாநாடு குறித்து ஒருங்கிணைந்த கோவை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு உழவர் பேரியக்க ஆலோசனைக்கூட்டம், ராம்நகரில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது.

தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநிலச் செயலாளர் வேலுச்சாமி கூறியதாவது:

சமீபத்திய புயல் மழையால், நான்கு மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. பல ஏக்கர் விவசாய பயிர்கள், கால்நடைகள் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு உடனடியாக நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வரும், அமைச்சர்களும், நிவாரணப் பொருட்கள் வழங்கி, ‘போட்டோ ஷுட்’ நடத்துகின்றனர்.

மக்களுக்கு தேவையானதை செய்வதற்கான பணிகள் நடக்கவில்லை. மத்திய அரசிடம் ரூ.2,000 கோடியை மட்டும் கேட்டுள்ளார்.

ஆளும்கட்சி அமைச்சர்கள், எதிர்கட்சித் தலைவர் சென்ற போது அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மக்கள் மத்தியில் முதல்வர், அமைச்சர்கள் மீதான வெறுப்பை இது காட்டு கிறது. ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்கும் இடையே உள்ள, இடைவெளி இதில் தெரிகிறது.

முகாம்களில் நிவாரணப்பொருட்களை கொடுத்து, அதை போட்டோ எடுத்து வெளியிடுவது, முதல்வர் பணி அல்ல. பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அதிகாரிகள், அமைச்சர்களை அனுப்பி மக்களுக்கு தேவையானவற்றை, உடனடியாக நிறைவேற்றும் பணியில் ஈடுபட வேண்டும்.

நிவாரணம் முறையாக நடப்பது போல் தெரியவில்லை. எந்த அதிகாரியும் களத்துக்கு சென்று மதிப்பீடு செய்யவில்லை. மத்திய அரசு கொடுக்கும் நிதியோடு, மாநில அரசும் நிதியை சேர்த்து மக்களுக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

கூட்டத்தில், உழவர் பேரியக்க மாநில துணை செயலாளர் பொன் ரமேஷ், மாநில துணைத்தலைவர் தங்கவேல் பாண்டியன், பா.ம.க., தொழிற்சங்க பேரவை பொதுச் செயலாளர் ராமசுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.