வால்பாறை; வால்பாறை – சாலக்குடி ரோட்டில் முகாமிட்டுள்ள ஒற்றை யானை, சுற்றுலா வாகனத்தை சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள மாநிலம், சாலக்குடியில் இருந்து, கோவை மாவட்டம் வால்பாறை வரும் ரோட்டில் யானைகள் தனித்தனி கூட்டமாக வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. இந்த வழித்தடத்தில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி உள்ளதால், சுற்றுலா பயணியர் அதிக அளவில் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், வால்பாறை – அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி ரோட்டில் உள்ள வனப்பகுதியில், கடந்த சில நாட்களாக யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. இதனால், மாலை, 6:00 மணிக்கு மேல் சாலக்குடி ரோட்டில் சுற்றுலா வாகனங்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இந்நிலையில், வால்பாறைக்கு சுற்றுலா வந்த பயணியர், மளுக்கப்பாறை வழியாக அதிரப்பள்ளிக்கு காரில் சென்றனர். அப்போது, எதிரே வந்த ஒற்றை யானை, சுற்றுலா பயணியரின் காரை விரட்டி, முன் பகுதியை சேதப்படுத்தியது. அப்போது அங்கு வந்த சுற்றுலாபயணியர் கூச்சலிட்டதால், யானை வனப்பகுதிக்குள் சென்றது. வாகனத்தில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
கேரள வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘அதிரப்பள்ளி ரோட்டில் யானைகள் நிரந்தரமாக முகாமிட்டுள்ளதால், இருசக்கர வாகனங்களில் சுற்றுலா பயணியர் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பிற வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
‘யானை எதிரே வந்தால், வாகனத்தை நிறுத்தி அமைதியாக இருந்தாலே யானை தானாக விலகி வனப்பகுதிக்குள் சென்று விடும். யானைகளுக்கு கோபம் ஏற்படும் வகையில், ஹாரன் ஒலிக்க செய்வது, கூச்சலிட்டு அதிக சப்தம் எழுப்புவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது,’ என்றனர்.