முதல்வருக்கு மனு அனுப்பி வேண்டுகோள்’ மதுக்கடை, பார் அனுமதியை ரத்து செய்யுங்க!

0
13

பொள்ளாச்சி; ‘பொள்ளாச்சி பெருமாள் செட்டி வீதியில், ‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் மீண்டும் திறக்க கூடாது,’ என, பொதுமக்கள், தமிழக முதல்வருக்கு மனு அனுப்பி உள்ளனர்.

பொள்ளாச்சி புது பஸ் ஸ்டாண்ட் அருகே, பெருமாள் செட்டி வீதி உள்ளது. குறுகிய தெருவாக உள்ள இங்கு, டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டன. இதனால், இவ்வழியாக செல்லும் பெண்கள், பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகினர்.

‘குடி’மகன்கள், போதையில் தள்ளாடி செல்வதால் விபத்துகள் ஏற்பட்டது. ஆடைகள் அவிழ்ந்த நிலையிலும், தகாத வார்த்தையால் பேசி சண்டை போட்டுக்கொள்வது போன்ற சம்பவங்கள் நடந்தன.அதனால், அங்கிருந்த டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டுமென வியாபாரிகள், பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து,அப்போதைய அ.தி.மு.க., ஆட்சியில் மதுக்கடைகள் மூடப்பட்டன.

இந்நிலையில், மீண்டும் டாஸ்மாக் மதுக்கடை அமைக்கப்பட உள்ளதாக தகவல் பரவியதையடுத்து, அங்கு மதுக்கடை திறக்க வேண்டாமென, தமிழக முதல்வருக்கு பொதுமக்கள் மனு அனுப்பி உள்ளனர்.

பெருமாள் செட்டி வீதி மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் அருகே, பெருமாள் செட்டி வீதியில் அரசு மதுபானக்கடைகள் இருந்தன. இந்த கடைகளால் பொதுமக்களுக்கு மிகுந்த பாதிப்பும், அச்சுறுத்தலும் இருந்தது. பொதுமக்களின் கோரிக்கை ஏற்று அரசு கடைகளை மூடியது.

மீண்டும் இந்த வீதியில் டாஸ்மாக் மதுபானக்கடை திறக்க உள்ளதற்கு, கடந்தாண்டு எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்தாண்டு மே மாதம் அரசு உத்தரவை திரும்ப பெற்றது. ஆனால், மீண்டும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் மாற்றத்துக்கு பின், இடத்தின் உரிமையாளர், பெருமாள் செட்டி வீதி என்பதை மறைத்து, இந்த இடத்தின் பின்புற வாசலை வேறு இடம் போல காண்பித்து, அந்த வீதியின் பெயரை குறிப்பிட்டு அதே இடத்தில் மதுக்கடை திறக்க மனு அளித்தது தெரிய வந்துள்ளது.

பெருமாள் செட்டி வீதியின் கிழபுறம் உள்ள சந்தானது, தனியார் ஒருவருக்கு சொந்தமானது. இந்த வழியை இன்று வரை நகராட்சிக்கு அவர் ஒப்படைக்கவில்லை. ஆனால், அவ்வழியே பெருமாள் செட்டி வீதியின் பின்புற வழியாகவும், அரசுக்கு சொந்தமானது போலனும் காட்டி அனுமதி கோரியுள்ளனர்.

எனவே, அரசு இரண்டு முறை மதுக்கடை மற்றும் பார் நடத்த அனுமதி வழங்கிய நிலையில், மக்கள் எதிர்ப்பு காரணமாக ரத்து செய்துள்ளது. மீண்டும் மீண்டும் மதுக்கடை மற்றும் பார் நடத்த உரிமையாளர் அனுமதி கோரி வருகிறார்.

எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பெருமாள் செட்டி வீதி, அதன் பின்புற வீதியில் மதுக்கடை மற்றும் பார் திறக்க அனுமதிக்க கூடாது. அதற்கான உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.