112 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கோவை ஓட்டு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு

0
116
கோவை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள, கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், சூலூர், பல்லடம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 2,045 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, 2,045 ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு ஓட்டுப்பதிவு நடைபெற்றது.
இந்த ஓட்டுப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு ஓட்டு எண்ணும் மையமான கோவை ஜி.சி.டி. கல்லூரிக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன.
கோவை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் ரேணு மற்றும் கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி, வேட்பாளர்களின் பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் ஒவ்வொரு ஸ்டிராங்க் அறையிலும் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. நேற்று பகல் 12 மணிவரை சீல் வைக்கும் பணிகள் நடைபெற்றன. பின்னர் கலெக்டர் ராஜாமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
ஓட்டுப்பதிவு எந்திரங்கள் 6 ஸ்டிராங்க் அறைகளில் வைக்கப்பட்டு 24 மணிநேரமும் தீவிரமாக பாதுகாக்கப்படுகிறது. மேலும் இந்த அறைகளை சுற்றிலும் மொத்தம் 112 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதற்கான கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருவார்கள்.
வேட்பாளர் மற்றும் வேட்பாளரின் பிரதிநிதிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எப்போதும் பார்வையிடலாம். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை பகுதியிலும் பார்வையிடலாம். வேட்பாளரின் பிரதிநிதிகள் ஸ்டிராங்க் ரூம் பகுதிகளில் தங்கி இருக்க அனுமதியில்லை. ஆனால் மற்ற பகுதியில் தங்கி இருந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிட்ட, கோவை நகர போலீஸ் துணை கமிஷனர் பாலாஜி சரவணன் கூறியதாவது:-
ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்டிராங்க் அறைகளை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துணை ராணுவத்தினர், துப்பாக்கி ஏந்திய போலீசார் உள்பட 120 பேர் 24 மணிநேரமும் கண்காணிப்பார்கள். 2 போலீஸ் துணை கமிஷனர்கள், 3 உதவி கமிஷனர்கள், 3 இன்ஸ்பெக்டர்கள் பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிடுவார்கள்.கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் 24 மணிநேரமும் கண்காணிக்கப்படும்.