பொள்ளாச்சி : ‘சீதோஷ்ண நிலை மாற்றத்தால் ஏற்படும் வைரஸ் காய்ச்சல் போன்றவற்றில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க, பெற்றோர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்,’ என, அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா தெரிவித்தார்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு, மழைச்சாரல் மற்றும் வெயிலின் தாக்கம் என, சீதோஷ்ண நிலை மாறி மாறி உள்ளது. இதனால், காய்ச்சல், சளி, இருமல் பாதிப்புக்குள்ளாகி பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
சீதோஷ்ண நிலை மாற்றத்தால், குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகிறது. அதில், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்புகளால் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு குழந்தைகள் நலப்பிரிவு தலைமை டாக்டர் செல்வராஜ் மற்றும் மருத்துவ குழுவினர், சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா கூறியதாவது:
மழை காலங்களில் வரக்கூடிய தக்காளி காய்ச்சல், குழந்தைகளை தாக்கி வருகிறது. இது ‘காக்ஸ்சாக்கி’ என்ற வைரஸ் கிருமி வாயிலாக பரவுகிறது; 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர்.
குழந்தைகளுக்கு சாதாரண காய்ச்சலுடன், உள்ளங்கை, உள்ளங்கால், நாக்கு ஆகிய இடங்களில் சிவப்பு நிறத்தில் சிறு புண் வந்து அரிப்பு ஏற்படுத்தும்.எதிர்ப்பு சக்தியுள்ள குழந்தைகளுக்கு தானாகவே குணமாகும் வாய்ப்புள்ளது. எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகள், சிகிச்சைக்கு பின் குணமடைய முடியும்.
அரிப்பை கட்டுப்படுத்த மருந்துகள் கொடுத்தாலே இந்த நோய் தானாகவே குணமாகிவிடும். மூன்று மாத கர்ப்பிணிகளுக்கு இந்த நோய் பரவ வாய்ப்புள்ளது. தக்காளி காய்ச்சல் பாதித்த குழந்தைகளிடம் இருந்து மற்ற குழந்தைகளுக்கு பரவ வாய்ப்புள்ளது.எனவே, குழந்தைகள் பயன்படுத்தும் பெட்சீட் உள்ளிட்ட பொருட்களை, துவைத்து உலர வைப்பது நல்லது.
சீதோஷ்ண நிலை மாற்றத்தால், தற்போது, மெட்ராஸ் ஐ, டெங்கு, மலேரியா போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. எனவே, பொதுமக்கள், சுத்தமாக இருப்பதுடன், கைகளை சோப்பு போட்டு கழுவி சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். நோய்களில் இருந்து காத்துக்கொள்ள விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.