கோவை: போஸ்டல் பிரீமியர் லீக்’ கிரிக்கெட் போட்டியில், கோவை மான்செஸ்டர் அணி கோப்பையை வென்றது.
மேற்கு மண்டல தபால் துறை சார்பில், போஸ்டல் பிரீமியர் லீக்’ கிரிக்கெட் போட்டி, கோவையில் கடந்த 17ம் தேதி முதல் நடத்தப்பட்டது. இதில், சேலத்தில் ஏழு அணிகளுக்கும், கோவையில் 7 அணிகளுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன.
அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள், கோவையில் உள்ள தமிழ்நாடு வனக்கல்லுாரி மைதானத்தில் நடந்தது. அரையிறுதி போட்டியில், திருப்பூர் போஸ்டல் பயனீர்ஸ் அணி, தர்மபுரி தண்டர் கிங்ஸ் அணியை, 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இரண்டாவது அரையிறுதி போட்டியில், கோவை மான்செஸ்டர் அணி, கிருஷ்ணகிரி ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் விளையாடியதில், கோவை அணி வெற்றி பெற்றது.
கோவை மற்றும் திருப்பூர் அணிகளுக்கான இறுதிப் போட்டியில், கோவை அணி முதலில் விளையாடி, ஆறு விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்தது.
அடுத்து விளையாடிய திருப்பூர் அணி, அனைத்து விக்கெட்களையும் இழந்து 66 ரன்கள் மட்டுமே எடுத்தது. 33 ரன்கள் வித்தியாசத்தில் கோவை மான்செஸ்டர் அணி கோப்பையை வென்றது.
கோவை மான்செஸ்டர் அணிக்கு, கோவை மேற்கு மண்டல அஞ்சல் துறை தலைவர் சரவணன் மற்றும் மேற்கு மண்டல அஞ்சல் துறை இயக்குனர் அகில் நாயர் ஆகியோர் கோப்பை மற்றும் பரிசு வழங்கினர்.
தொடரின் சிறந்த பேட்ஸ்மேனாக, கோவை மான்செஸ்டர் அணியை சேர்ந்த மணிகண்டன், சிறந்த பவுலராக திருப்பூர் அணியை சேர்ந்த சந்தோஷ்குமார் தேர்வு செய்யப்பட்டு, பரிசு வழங்கப்பட்டது. கோவை மான்செஸ்டர் அணியின் தினேஷ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
போட்டி ஏற்பாடுகளை, ஆர்.எம்.எஸ்., கோவை கோட்ட கண்காணிப்பாளர் ஜெயராஜ் பாபு செய்திருந்தார்.