கோவை வீரர்கள் அசத்தல் : தேசிய அளவிலான செஸ்

0
14

கோவை; இந்திய பள்ளிகள் விளையாட்டு சம்மேளனம் சார்பில், 68வது தேசிய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு போட்டி, கோல்கட்டா மற்றும் மத்திய பிரதேச பகுதியில் இரண்டு பிரிவுகளாக நடந்தது. இதில் கோவை மாணவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தங்க பதக்கம் வென்றனர்.

இதில், 19 வயதுக்கு உட்பட்ட பிரிவுக்கான போட்டிகள் கோல்கட்டாவிலும், 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான குழு போட்டி, மத்திய பிரதேசத்திலும் நடந்தது.

தமிழகத்தில் இருந்து, 19 வயது பிரிவில் மாணவர்கள் 5 பேர், மாணவிகள் 5 பேர் வீதம் 10 பேரும், 17 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் 10 பேரும் பங்கேற்றனர். போட்டிகள் கடந்த, நவ., 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடந்தது.

கோவை மாவட்டம் சார்பில், தமிழக அணியில் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில், மாணவன் சர்வேஷ்வரன் பங்கேற்றார்.

மாணவிகள் பிரிவில் தேஜஸ்வி, சுகிர்தா ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள் பங்கேற்ற தமிழக அணி இரு பிரிவுகளிலும், தங்கம் வென்று அசத்தியது.

அதே போன்று, 17 வயதுக்குட்பட்டர்கள் பிரிவில், கோவை மாணவன் ஆகாஷ் பங்கேற்ற தமிழக அணி வெள்ளி பதக்கம் வென்றது.

தமிழக அணியில் பங்கேற்று, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோவையை சேர்ந்த மாணவ, மாணவிகளை மாவட்ட செஸ் சங்கம் சார்பில், நிர்வாகிகள் பாராட்டு விழா நடத்தி கவுரவித்தனர்.