‘மூளையில் ஏற்படும் சீரற்ற அல்லது அசாதாரண மின்னதிர்வுகளால் வலிப்பு நோய் ஏற்படுகிறது. 75 சதவீத வலிப்பு நோயை மருந்துகளாலேயே குணப்படுத்தி விடமுடியும்’ என, கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை நரம்பியல் மற்றும் வலிப்பு நோய் நிபுணர் டாக்டர் ராஜேஷ் சங்கர் ஐயர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:
வலிப்பு நோய் என்பது பொதுவாகக் காணக்கூடிய, அனைத்து வயதினருக்கும் வரக்கூடிய மூளையில் ஏற்படும் ஒரு நரம்பியல் நோயாகும்; உலகம் முழுவதும் 5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மூளையில் ஏற்படும் சீரற்ற அல்லது அசாதாரண மின்னதிர்வுகளால் வலிப்பு நோய் ஏற்படுகிறது. பரம்பரையாக உள்ள குறை அல்லது மூளையில் ஏற்படும் காயம், பக்கவாதத்தாலும் வலிப்பு வரலாம். வலிப்பு வரும்போது நடத்தை அசாதாரணமாக மாறிவிடும், நினைவிழப்பு ஏற்படும்.
எந்த வயதினருக்கும், எந்த பிரிவினருக்கும் வலிப்பு நோய் ஏற்படலாம். இதை ஆரம்ப நாட்களிலேயே கண்டறிந்தால் குணப்படுத்திவிடலாம். 75 சதவீத வலிப்பு நோயை மருந்துகளாலேயே குணப்படுத்தி விடமுடியும். சில வகையான வலிப்பு நோய்களுக்கு அறுவை சிகிச்சை, உணவுப் பழக்க மாறுதல் போன்ற சிகிச்சை தேவைப்படும்.
வலிப்பு நோயைக் கண்டறிந்து, சிகிச்சை அளிக்க கே.எம்.சி.எச்.,ல் ‘சி.டி., ஸ்கேன்’, எம்ஆர்ஐ ஸ்கேன் உள்ளிட்ட வசதிகளுடன், கட்டுப்படுத்த இயலாத வலிப்பு நோயாளிகளுக்காக வீடியோ இ.இ.ஜி., கருவி வசதியும் உள்ளது.
வலிப்பு நோயாளிகளுக்கான பிரத்யேக மருத்துவ முகாம், கே.எம்.சி.எச்., சார்பில், டிச., 8-ம் தேதி, நடக்கிறது. கோவை, ராம்நகரில் உள்ள கே.எம்.சி.எச்., சிட்டி சென்டரில் காலை, 9:00 முதல் மதியம், 1:00 மணி வரை நடக்கும் முகாமில், சலுகை கட்டணத்தில், பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
முன்பதிவு மற்றும் மேலும் விவரங்களுக்கு, 74188 87411 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.