நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் முடிவு

0
33

அன்னுார் : நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலையில், தினமும் 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் செல்கின்றன. காலை மற்றும் மாலை நேரங்களிலும், முகூர்த்த நாட்களிலும், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதற்கு தீர்வாக, கோவில்பாளையத்துக்கு முன்னதாக, உள்ள குரும்பபாளையத்தில் துவங்கி, அன்னுார், புளியம்பட்டி, சத்தி, பண்ணாரி வழியாக, கர்நாடக எல்லை வரை புறவழிச்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிலம் கையகப்படுத்த 3 ஏ நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது நிலம் கையகப்படுத்த ஆயத்த பணி துவங்கி உள்ளது. இதையடுத்து அன்னுார், கோவில்பாளையம், பசூர் பகுதி விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில், கிணத்துக்கடவு உள்பட பல இடங்களில் விவசாய நிலங்களை கையகப்படுத்தாமல் ஏற்கனவே உள்ள தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தியும் உயர்மட்ட மேம்பாலம் அமைத்தும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கண்டுள்ளனர்.

அதே வழியில், அன்னுாரில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும். பல நூறு ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதால், பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் சொந்த நிலத்தை விட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்,

எனவே, எக்காரணம் கொண்டும் ஓரடி விவசாய நிலத்தை கூட புறவழிச் சாலைக்காக தரமாட்டோம். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 10ம் தேதி காலை 11:00 மணிக்கு கோவை செஞ்சிலுவை சங்கம் முன் விவசாயிகள் மற்றும் பொது மக்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அனைத்துக் கட்சி, விவசாய அமைப்புகள், சமூக அமைப்புகளிடம் ஆதரவு திரட்டவும் தீர்மானிக்கப்பட்டது.