காரமடை ஒன்றியத்திற்கு வரவேண்டிய நிதி தனியாருக்கு சென்றதில் முறைகேடு

0
61

மேட்டுப்பாளையம்: காரமடை ஒன்றியத்திற்கு வரவேண்டிய நிதிதனியாருக்கு சென்றதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

காரமடை ஊராட்சி ஒன்றியத்தில், இந்த ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், பெள்ளாதி ஊராட்சி தேர்வு செய்து, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஒன்றிய அலுவலக பணியாளர்கள் வழங்கிய வங்கிக் கணக்கு எண்ணிற்கு, ஊராட்சி நிர்வாகம் குறிப்பிட்ட தொகையை, பல மாதங்களுக்கு முன் அனுப்பி வைத்தது. பின்பு விசாரணையில், அது அலுவலக வங்கி கணக்கு எண் இல்லை எனவும், தனிநபர் வங்கி கணக்கு எனவும் தெரியவந்தது.

இதுகுறித்து காரமடை ஊராட்சி ஒன்றிய ஒப்பந்ததாரர்கள் கூறியதாவது:

பெள்ளாதி ஊராட்சியில் இருந்து அனுப்பிய, அண்ணா மறுமலர்ச்சி திட்ட சதவீதத் தொகை, 2 லட்சத்து, 72 ஆயிரத்து, 681 ரூபாய், காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலக வங்கி கணக்கிற்கு செல்லாமல், தனிநபர் ஒருவரின் வங்கி கணக்கிற்கு சென்றுள்ளது. அரசுக்கு சேர வேண்டிய இந்த நிதியை, தனிநபர் வங்கி கணக்கிற்கு அனுப்பியதில், ஏதோ முறைகேடு நடந்துள்ளது என தெரிகிறது.

தனிநபர் வங்கி எண் கொடுத்த பணியாளர்கள் மீது, நான்கு மாதங்களுக்கு மேலாகியும், உயர் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஒப்பந்ததாரருக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை வழங்கப்படாமல் உள்ளது.

இதில் ஏதோ முறைகேடு நடந்துள்ளது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து, தொகையை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

இது குறித்து காரமடை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) மகேஸ்வரி கூறுகையில், இது குறித்து விசாரணை செய்யப்படும். அந்த தொகை தனி நபரிடம் இருந்து வசூல் செய்யப்பட்டது. மேலும் இதில் தவறு செய்த பணியாளர்களிடம், துறை ரீதியான விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.