பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், நடிகர் சூர்யா தரிசனம் செய்ததுடன், புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள, ‘கங்குவா’ திரைப்படம் கலவையான விமர்சனங்களுடன் ஓடிக்கொண்டு இருக்கிறது. மேலும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 44வது படத்தின் படப்பிடிப்பு முடிந்து, தற்போது மார்ச் மாதம் திரைக்கு வருவதாக கூறப்படுகிறது.
டீரிம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.ரகுமான் இசையில், ஆர்.ஜே., பாலாஜி இயக்கத்தின், சூர்யாவின், 45வது பட அறிவிப்பு தொடர்பான முதல் போஸ்டர் வெளியாகியது.
இந்நிலையில், ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடிகர் சூர்யா, இயக்குனர் ஆர்.ஜே., பாலாஜி, அவரது குடும்பத்தினர் மற்றும் படக்குழுவினர், நேற்று காலை சுவாமி தரிசனம் செய்தனர்.
அவர்களை அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன், மற்றும் கோவில் நிர்வாகத்தினர் வரவேற்றனர்.
தொடர்ந்து, கேமரா, கிளாப் போர்டு வைத்து பூஜை செய்ததையடுத்து, படப்பிடிப்பு துவங்கப்பட்டுள்ளது. முதற்கட்ட படப்பிடிப்பு கோவையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.