அகில பாரத இந்து மகா சபா புகார் மனு ‘இசைவாணி, ரஞ்சித் மீது நடவடிக்கை தேவை:

0
13

கோவை: சினிமா இயக்குனர் ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தில், ‘கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ என்ற இசைக்குழு உள்ளது. இதில், கானா பாடகியான இசைவாணி என்பவர், 2019ல் நடந்த இசை நிகழ்ச்சியில், ‘ஐ யம் சாரி அய்யப்பா… நான் உள்ளே வந்தால் என்னப்பா…’ எனத் துவங்கும் பாடலை பாடியிருந்தார். இந்த பாடலை இப்போது சிலர் டிரெண்ட் செய்ததால், சர்ச்சையாகி வருகிறது.

அதாவது, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்வதில்லை. இதை விமர்சித்தே பாடலை பாடி உள்ளார். இதனால், ஹிந்துக்களின் நம்பிக்கையை அவர் இழிவுபடுத்தி உள்ளார்; அய்யப்ப விரதம் உட்பட பல விஷயங்களை அவதுாறு செய்கிறார் என, பல்வேறு தரப்பிலும் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து பல்வேறு அமைப்புகளும் போலீசாரிடம் புகார் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், அகில பாரத இந்து மகா சபா மாநில மகளிர் அணித் துணைத் தலைவர், நிர்மலா மாதாஜி, கோவை மாவட்ட மகளிர் அணி தலைவர் பானுமதி ஆகியோர் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் நேற்று புகார் மனு அளித்தனர்.

மனுவில், சமூக வலைதளத்தில் அய்யப்ப பக்தர்களின் மத சிந்தனையையும், விரத கட்டுப்பாடுகளையும் கொச்சைப்படுத்தும் விதத்தில் பாடல் பரவி வருகிறது. இதனால் சமூக ஒற்றுமையும், நல்லிணக்கமும் பாதிக்கும் அபாயம் உள்ளது. இந்த பாடலை பாடிய இசைவாணி மற்றும் இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.