கழிவு பஞ்சுக்கு பேக்கிங் கட்டணம் வசூல்

0
91

நூற்பாலைகளில் வாங்கும்போது கழிவு பஞ்சுக்கு பேக்கிங் கட்டணம் வசூலிக்கப்படுவதை ரத்து செய்ய ஓபன் எண்ட் மில் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

ஓபன் எண்ட் மில்கள்

நூற்பாலைகளில் இருந்து கிடைக்கும் கழிவு பஞ்சை ஓபன் எண்ட் மில் என்று அழைக்கப்படும் மில்கள் வாங்கி அதில் இருந்து நூல் தயாரித்து காடா துணி, போர்வை, டவல், மிதியடி, கம்பளி, லுங்கி, ஜீன்ஸ் உள்ளிட்டவைகளை உற்பத்தி செய்து வருகின்றன.

தமிழகத்தில் 600-க்கும் மேற்பட்ட ஓபன் எண்ட் மில்கள் உள்ளன. இந்த மில்கள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகிறார்கள். இங்கிருந்து நூல்கள் உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளில் உள்ள விசைத்தறிகளுக்கு வழங்கப்படுகிறது.

பேக்கிங் கட்டணம்

அங்கிருந்து காடா துணி உற்பத்தி செய்யப்பட்டு ஆமதாபாத்துக்கு அனுப்பி வைத்து பிரிண்டிங் போட்டு டவல், லுங்கி உள்பட பல்வேறு துணிகளும், வீட்டில் உபயோகப்படுத்தும் கால்மிதியடி உள்ளிட்டவைகளும் தயாரிக்கப்படுகிறது.

இந்த கழிவு பஞ்சு விலை தற்போது இருமடங்கு உயர்ந்து விட்டபோதிலும், கழிவுபஞ்சை வாங்கும்போது அதற்கு பேக்கிங் கட்டணம் என்று தனியாக வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ஓபன் எண்ட் மில்கள் வலியுறுத்தி உள்ளன.இது குறித்து ஓபன் எண்ட் மில்கள் சங்க (ஒஸ்மா) தலைவர் அருள்மொழி மற்றும் தொழில் துறையினர் கூறியதாவது:-

எந்த மாநிலத்திலும் இல்லை

நூற்பாலைகளில் பஞ்சுவில் இருந்து நூல் தயாரிக்கும்போது 20 சதவீத பஞ்சு கழிவு ஏற்படும். கோம்பர் கழிவு பஞ்சு என்று அழைக்கப்படும் இந்த கழிவு பஞ்சை வாங்கிதான் அதில் இருந்து நூல் உற்பத்தி செய்து வருகிறோம். கடந்த ஆண்டில் கழிவு பஞ்சு கிலோ ரூ.80 வரை விற்பனையானது. ஆனால் தற்போது அது கிலோ ரூ.140 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இந்த நிலையில் கழிவு பஞ்சு வாங்கும்போது 150 கிலோ கொண்ட பேக்கிங்குக்கு கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்பட்டு வருகிறது. நமது நாட்டில் குஜராத், மராட்டியம் உள்பட எந்த மாநிலத்திலும் பேக்கிங் கட்டணம் வசூலிக்கப்படவில்லை.

பண்டலுக்கு ரூ.100 கட்டணம்

மேலும் நூற்பாலைகளுக்கு பஞ்சு வாங்கும்போதும் அவர்களுக்கு பேக்கிங் கட்டணம் வசூலிக்கப்படுவது இல்லை. ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் நூற்பாலைகளில் இருந்து கழிவு பஞ்சுகளை வாங்கும்போது அதற்கு தனியாக பேக்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 10 ஆண்டாக இந்த கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தாலும், அப்போது கழவுபஞ்சுவின் விலை குறைவாக இருந்தது. ஆனால் தற்போது கிலோ ரூ.140 வரை விற்பனை செய்யப்பட்டு வருவதால், பேக்கிங் செய்யும்போது ஒவ்வொரு பண்டல்களுக்கும் ரூ.100 கட்டணமாக வழங்கி வரும் நிலை ஏற்பட்டு உள்ளது.

ரத்து செய்ய வேண்டும்

ஏற்கனவே கழிவுபஞ்சு விலை உயர்ந்து வரும் நிலையில், பேக்கிங் கட்டணம் வசூலிக்கப்படுவதால் எங்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டு வருகிறது. எனவே தமிழகத்தில் நூற்பாலைகளில் இருந்து கழிவு பஞ்சு வாங்கும்போது வசூலிக்கப்பட்டு வரும் பேக்கிங் கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அத்துடன் கழிவு பஞ்சு விலையையும் குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.