பொள்ளாச்சியில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்

0
84

பொள்ளாச்சியில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடந்தது.

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்

சென்னை ஐகோர்ட்டு அனுமதியுடன் தமிழ்நாடு முழுவதும் நேற்று ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்துக்கு போலீசார் கடும் கட்டுபாடுகளை விதித்து இருந்தனர். அதன்படி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடும் கட்டுபாடுகளுக்கு மத்தியில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடந்தது.

இதேபோல் பொள்ளாச்சியிலும் நேற்று ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடந்தது. பொள்ளாச்சி பல்லடம் சாலையில் ராஜேஸ்வரி மண்டபத்தில் இருந்து ஆர்.எஸ்.எஸ்.சின் ஊர்வலம் தொடங்கியது. பின்னர் பைவ் கார்னர், ரவுண்டானா, கோவை ரோடு ஆர்ச், நல்லப்பா, துரைஸ் தியேட்டர் வழியாக காந்தி சிலை வந்து அங்கிருந்து நியூ ஸ்கீம் ரோடு வழியாக மீண்டும் ராஜேஸ்வரி மண்டபத்தை அடைந்தது. இதில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் வெள்ளை சட்டை, காக்கி பேண்ட் அணிந்து பேண்டு வாத்தியம் முழங்க கம்பீரமாக வரிசையாக நடந்து சென்றனர்.

போலீஸ் பாதுகாப்பு

ஊர்வலத்தின் வழிநெடுகிலும் ஆர்.எஸ்.எஸ். ரதம் மீது பொதுமக்கள் மலர்தூவி வரவேற்றனர். இந்த ஊர்வலத்தில் பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, வால்பாறை ஆகிய பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து பல்லடம் சாலையில் ஆர்.எஸ்.எஸ். பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க இருபுறமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பொள்ளாச்சி ஏ.எஸ்.பி. பிருந்தா தலைமையில் 425 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.