விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி

0
61

ஆனைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட காளியப்பகவுண்டன்புதூர் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையம் என்ற தலைப்பில் விவசாயிகளுக்கான பயிற்சி, நேற்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மீனா கூறுகையில், தென்னை மரத்திற்கு இடையில் ஊடுபயிராக லாபம் தரும் வாழை, துவரை, மிளகு, ஜாதிக்காய் போன்ற பயிர்களை பயிரிடலாம். அதிகளவிலான களைக்கொல்லி, வேர்வழி திரவ பூச்சிக்கொல்லி பயன்பாடு, யூரியா உரப்பயன்பாட்டினை குறைக்க வேண்டும். தென்னையில் சொட்டுநீர் பாசனம் அமைப்பதன் மூலம் கேரள வேர் வாடல் நோய் நீர் வழி பரவலை கட்டுக்குள் வைக்கலாம் என்றார். மேலும் வேளாண்துறையால் மானிய விலையில் வழங்கப்படும் டிரைகோடர்மா விரிடி பூஞ்சான கொல்லியை மக்கிய தொழு உரம், வேப்பம் புண்ணாக்குடன் கலந்து மரத்தின் வேர்ப்பகுதியில் இடுவதன் மூலம் மண் வழி பரவும் நோய்களை கட்டுப்படுத்தலாம் என்று விளக்கப்பட்டது. வேளாண் உதவி இயக்குனர் விவேகானந்தன் கூறும்போது, தென்னை விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டத்தில் கிடைக்கும் பயன்கள் குறித்தும், விருப்பத்தின் பேரில் இணைய உரிய வழிமுறைகளையும் எடுத்துரைத்தார். பயிற்சியில் விவசாயிகளுக்கு மோர் கலந்த கம்பங்கூழ் வழங்கப்பட்டது.