ஆழியாறு புதிய ஆயக்கட்டில் குழாய் வழி பாசன திட்டத்தை கைவிட வேண்டும்

0
56

குழாய் வழி பாசன திட்டத்தால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் என்பதால் அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விவசாயிகள் கூட்டம்

பொள்ளாச்சி அருகே தென்சங்கம்பாளையத்தில் ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன நலச்சங்க விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில், துணைச்செயலாளர் சின்னத்துரை மற்றும் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நடப்பாண்டில் பாசனத்திற்கு உரிய நேரத்தில் தேவைக்கு ஏற்ப கடைமடை வரை சீராக நீரை கொண்டு சேர்க்க திட்டமிட்டு செயல்படுத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும், கண்காணித்து பகிர்ந்து வழங்கி பாசன சபை தலைவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளில் நுண்ணீர் பாசனம் அல்லது குழாய் வழி பாசனத்தை செயல்படுத்த ஆய்வு மேற்கொள்ள பரிசீலனை செய்வதாக தகவல் வருகிறது. இந்த பகுதி விவசாயத்திற்கு சற்றும் பொருந்தாத அந்த திட்டத்திற்கு ஆய்வு மேற்கொள்ளவதை முற்றிலும் கைவிட வேண்டும் என்று அரசுக்கும், அதிகாரிகளுக்கும் வேண்டுகோள் வைப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன சங்க விவசாயிகள் கூறியதாவது:-

நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும்

ஆழியாறு அணை மூலம் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 42 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. இந்த கால்வாய் மூலம் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது நுண்ணீர் பாசனம் அல்லது குழாய் வழி பாசன திட்டத்தை செயல்படுத்த ஆய்வு மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வந்து உள்ளது. கால்வாய் வழி பாசனத்தின் மூலம் வழியோரத்தில் உள்ள கிணறுகள், ஆழ்துளை கிணறுகளின் நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது. மேலும் பருவமழைக்காலங்களில் அணையில் இருந்து உபரிநீர் குளம், குட்டைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

குழாய் வழி பாசன திட்டம் செயல்படுத்தினால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும். மேலும் உபரிநீரை குளம், குட்டைகளுக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. பாசன காலங்கள் மட்டும் தண்ணீர் வழங்க முடியும். குழாய் வழி பாசன திட்ட ஆய்விற்கு ஒதுக்கப்படும் நிதியை கால்வாய்களின் கரைகளை பலப்படுத்தி, கான்கீரிட் தளம் அமைத்தால் தண்ணீரை வீணாகாமல் கடைமடைக்கு கொண்டு செல்ல முடியும். எனவே ஆழியாறு புதிய ஆயக்கட்டு பகுதிகளில் குழாய் வழி பாசன திட்டம் சாத்தியமில்லாதது ஆகும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.