பொள்ளாச்சி மார்க்கெட் ரோட்டில் உள்ள குடிநீர் குழாயில் 3 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
குழாய் சீரமைப்பு பணி
பொள்ளாச்சி நகராட்சி மக்களுக்கு அம்பராம்பாளையம் ஆழியாறு மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆற்றில் குடிநீர் எடுத்து, அங்கேயே சுத்திகரித்து ராட்சத குழாய்கள் மூலம் மார்க்கெட் ரோட்டில் உள்ள நீரேற்று நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறது. மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் மார்க்கெட் ரோட்டில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகியது.
இதுகுறித்து கடந்த 18-ந்தேதி ‘தினத்தந்தி’யில் படத்துடன் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து அதிகாரிகள் குழாய் உடைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக 2 நாட்கள் நகரில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் சீரமைப்பு பணிகளை நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், ஆணையாளர் தாணுமூர்த்தி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். குழாய் உடைப்பு சீரமைப்பு பணிகள் காரணமாக நகரில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
3 இடங்களில் உடைப்பு
அம்பராம்பாளையம் ஆழியாற்றில் இருந்து 10.5 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுத்து சுத்திகரிக்கப்படுகிறது. இதில் 9.3 மில்லியன் லிட்டர் தண்ணீர் நகராட்சிக்கு வினியோகம் செய்யப்படுகிறது. ஒரு நபருக்கு தினமும் 103 லிட்டர் என்ற அளவில் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் மார்க்கெட் ரோட்டில் சீரமைப்பு பணிக்காக குழி தோண்டப்பட்டது.
அதன்பிறகு தான் 3 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதன் காரணமாக பணிகளை முடிப்பதில் தாமதம் ஆனது. விடிய, விடிய பணிகளை மேற்கொண்டு நாளை (இன்று) காலைக்குள் பணிகள் முழுமையாக முடிக்கப்படும். அதன்பிறகு பொதுமக்களுக்கு வழக்கம் போல் குடிநீர் வினியோகம் செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.