கோவையில் நடந்த மத்திய அரசு பணிக்கான தேர்வில் ஆள்மாறாட்ட மோசடி நடைபெற்றது. இதுதொடர்பாக அரியானா மாநிலத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீசில் கூறியதாவது:-
மத்திய அரசு பணி தேர்வு
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மர பெருக்கு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு பன்முக உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்காக ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த பணிக்கு இந்தியா முழுவதிலும் இருந்து ஆன்லைன் மூலமாக ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர்.
இதற்கான எழுத்து தேர்வு கடந்த மாதம் 4-ந் தேதி கோவையில் நடைபெற்றது. அப்போது தேர்வு எழுத வந்தவர்களின் புகைப்படம் மற்றும் கைரேகை ஆகியவை பதிவு செய்யப்பட்டன. இந்தநிலையில் நேற்று முன்தினம் இந்த பணிக்கான நேர்முக தேர்வு நடைபெற்றது அப்போது தேர்வு எழுதிய 4 பேரின் புகைப்படம் மற்றும் கைரேகை ஆகியவை மாறுபட்டு இருந்தது.
ஆள்மாறாட்டத்தில் 4 பேர் கைது
இது அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனை அடுத்து அதிகாரிகள் அந்த 4 பேரையும் சந்தேகத்தின் பேரில் பிடித்து ஆங்கிலத்தில் எழுதுமாறும், சரளமாக பேசுமாறும் கூறினார்கள். ஆனால் அவர்களால் பேசவும், எழுதவும் முடியவில்லை. ஆனால் தேர்வில் இவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். அப்போது அதான் அதிகாரிகளுக்கு தெரிந்தது இவர்கள் 4 பேரும் ஆள் மாறாட்டம் செய்து தங்களது பெயரில் வேறு நபர்களை வைத்து தேர்வு எழுதியது தெரியவந்தது. இதற்கு பணமும் கொடுத்துள்ளனர். இது குறித்து மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் இயக்குனர் குன்னிக்கண்ணன் சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
ஆள் மாறாட்டத்தில் பிடிபட்ட 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இவர்கள் அரியானா மாநிலத்தை சேர்ந்த ஆர். அமித் குமார் (வயது 30), எஸ்.அமித் குமார் (வயது 26), அமித் (23), சுலைமான் (25) என்பது தெரிய வந்தது. போலீசார் 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவர்களுக்கு பதிலாக பணத்தை பெற்றுக்கொண்டு தேர்வு எழுதியவர்களையும் போலீசார் தேடி வரகிறார்கள்.
இந்த ஆள்மாறாட்ட தேர்வு விவகாரம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து கோவையில் நடைபெறும் மத்திய மற்றும் மாநில அரசு தேர்வுகளை தீவிரமாக கண்காணிக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த மோசடி குறித்து, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறும்போது, கோவையில் நடந்த மத்திய அரசு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து 4 பேர் கைது செய்யப்பட்டு புலன்விசாரணை நடைபெறுகிறது. இந்த விசாரணையின் முடிவில் கூடுதல் தகவல் தெரியவரும் என்று அவர் கூறினார்.