ஊரக வேளாண் பணி அனுபவத்தின் கீழ் ஆழியார் அருகே தங்கியிருக்கும் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் படிக்கும் 4-ம் ஆண்டு இளங்கலை வேளாண் மாணவிகள் (ஆழியார் குழு) அப்பகுதி விவசாயிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக பொள்ளாச்சி அருகே முடக்குபட்டியிலுள்ள ஓர் விவசாயியின் பப்பாளித் தோட்டத்தில் பப்பாளியில் பால் எடுத்தல் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். முதிர்ந்த (75 -90 நாள்) பப்பாளிக் காய்களில் துரு ஏறாத கத்தியின் மூலம் 2- 3 மி.மீ ஆழத்தில் 4 இடங்களில் கீரலிட்டு வடியும் பாலினை அலுமினியத் தட்டுகள் மூலம் சேகரிக்கலாம். இதே போல் ஒரே காயிலிருந்து 3 நாட்கள் இடைவெளியில் 4 முறை எடுக்கலாம். கோ2 மற்றும் கோ 5 ரக பப்பாளியில் பால் எடுப்பதற்கு உகந்ததாக இருக்கும். ஒரு ஹெக்டேருக்கு கோ 2 – 600 கிலோ, கோ 3 – 800 கிலோ பப்பாளிபால் கிடைக்கும். இவ்வாறு பப்பாளியில் மதிப்பு கூட்டுவது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.