ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சி மண்டல காவல் துறைத் தலைவர் டாக்டர் எம்.தமிழ்வாணன் தலைமையில் காவல் துறை கண்காணிப்பாளர் ஷம்ஷாத் ஷம்சி, தொழிலாளர் துறை இணை ஆணையர் மற்றும் இயக்குனர் ராகேஷ் பிரசாத், ராம்கர் மாவட்ட தொழிலாளர் கண்காணிப்பாளர் அபிஷேக் வர்மா, ஜார்கண்ட் பிரதிநிதி ஆகாஷ் குமார், ஜார்கண்ட் மாநில புலம்பெயர்ந்தோர் கட்டுப்பாட்டு அறை பிரதிநிதி ஷிகா லக்ரா ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று இரவு கோவைக்கு வந்தனர். தொடர்ந்து கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து வந்து கோவையில் தங்கி பணியாற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் விவாதித்தனர். இதில், கலெக்டர் கிராந்திகுமார், மாநகர துணை போலீஸ் கமிஷனர் சிலம்பரசன், மாவட்ட போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கோவை மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு எந்தவிதபிரச்சினையும் இல்லை என்றும், அவர்கள் தாக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் எடுத்துக்கூறினார்கள். மேலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு அவர்கள் புகார் தெரிவிக்க போன் எண்கள் வழங்கப்பட்டு இருப்பதாகவும், வரும்காலங்களிலும் உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர்.