“பா.ஜ.க.வின் கண்அசைவு இல்லாமல் அ.தி.மு.க.வில் எதுவும் நடக்காது”

0
80

2 ஆயிரம் பேருக்கு பொற்கிழி

தி.மு.க. முன்னோடிகள் 2 ஆயிரம் பேருக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம்கோவை கொடிசியாவில் நடைபெற்றது. இதில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு தி.மு.க. முன்னோடிகளுக்கு பொற்கிழிகளை வழங்கி, குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

20 ஆயிரம் பேர் கவுரவிப்பு

தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா மாநாடு போல் நடத்தப்படுகிறது. கலைஞர் அறக்கட்டளை சார்பில் மாதந்தோறும் 8 பேருக்கு மருத்துவம் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதுவரை 4,078 பேருக்கு ரூ.5 கோடியே 67 லட்சத்து 90 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது.

இளைஞர் அணி செயலாளராக நான் பொறுப்பு ஏற்ற பின்னர் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்யும்போது தி.மு.க. முன்னோடிகளுக்கு உதவித்தொகையுடன் பொற்கிழி வழங்கி வருகிறேன். இதுவரை 20 ஆயிரம் பேருக்கு ரூ.20 கோடியும், பொற்கிழியும் வழங்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே எந்த இயக்கமும் எடுக்காத முயற்சி இது.

கோவை தி.மு.க. கோட்டையானது

சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டம் வெற்றி வாய்ப்பை வழங்கா விட்டாலும், தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்- அமைச்ச ராக பொறுப்பு ஏற்றபின் 6 முறை இங்கு வருகை தந்து 1 லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளார்.

அ.தி.மு.க. 10 ஆண்டுகாலம் ஆட்சி செய்து ரூ.5 லட்சம் கோடி கடனை தான் விட்டுச்சென்றுள்ளனர்.

உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியில் 97 சதவீதம் தி.மு.க. வெற்றி பெற்றது. கோவை அ.தி.மு.க. கோட்டை இல்லை. தி.மு.க. கோட்டை என்று கோவை மக்கள் நிரூபித்து காண்பித்து விட்டார்கள்.

மேலும் 31 பேரூராட்சிகளிலும், 7 நகராட்சிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்றது. இந்த வெற்றியை உறுதி செய்தது தி.மு.க. வின் மூத்த முன்னோடிகள் தான்.

ஈரோடு வெற்றி

தி.மு.க. தலைவரின் கடினமான உழைப்பினால் தான் ஈரோடு கிழக்கு தொகுதியில் அமோக வெற்றி கிடைத்தது. அவர் ஒரு நாளில் சென்று 5 இடங்களில்தான் பேசினார். ஆனால் எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அங்கேயே குடியிருந்து வந்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் 4 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சி செய்தது. அப்போது எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் கூட்டு சேர்ந்து செயல்பட்டனர்.

முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் என்றும், ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என்றும் இருந்தனர்.

கமலாலயம் பக்கம் மட்டும் போகாதீர்கள் என்று அவர்கள் குறித்து சட்டமன்றத்தில் நான் பேசினேன். ஆனால் போட்டி போட்டு கமலாலயம் வாசலில் காத்துகிடந்தனர். தற்போது அவர்கள் பா.ஜ.க.வின் அடிமைகளாக உள்ளனர்.

பா.ஜ.க.வின் கண்அசைவு

பா.ஜ.க.வின் கண்அசைவு இல்லாமல் அ.தி.மு.க.வில் எதுவும் நடக்காது. ஈரோடு இடைத்தேர்தல் அறிவித்தபோது எனக்கு ஒரு பயம் இருந்தது.

எங்கே பா.ஜ.க.வை விட்டு அ.தி.மு.க. வெளியே வந்து விடுவார்களோ என்று நினைத்தேன். அந்த கூட்டணியும் உறுதியாக இருந்தது. நமது வெற்றியும் உறுதியாக இருந்தது. அந்த அளவுக்கு பா.ஜ.க.வை தமிழக மக்கள் வெறுக்கிறார்கள். பா.ஜ.க. ஆடியோ, வீடியோ கட்சியாக உள்ளது. ஆடியோவை வெளியிடுவேன், வீடியோவை வெளியிடுவேன் என்று அவர்களது கட்சிக்குள்ளேயே போட்டி நடக்கிறது. இந்தியாவில் இதுபோன்ற கட்சியை பார்த்து உள்ளீர்களா?.

40 தொகுதிகளிலும் வெற்றி

பா.ஜ.க. கட்சியில் பொறுப்பில் இருப்பவர் சமீபத்தில் விலகிய போது, அவரது தலைவரை மனநலம்குன்றியவர், 420 என்று விமர்சிக்கிறார். வெறுப்பு அரசியலை அந்த கட்சி விதைக்கிறது. பீகார் மாநிலத்தவர்களை துன்புறுத்துவதாக பொய்யை பரப்புகி றார்கள். அவர்களுக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற வேண்டும். நாற்பதும் நமதே, நாடும் நமதே. இவ்வாறு அவர் கூறினார்.