பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் நெகமம், சாலைப்புதூர், சிறுக்களந்தை, காட்டம்பட்டி, தாசநாயக்கன்பாளையம், செஞ்சேரி பிரிவு, சுல்தான்பேட்டை மற்றும் பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து தினந்தோறும் பொள்ளாச்சி-பல்லடம், திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு அதிகளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் இந்த பகுதியில் அதிகளவில் தொழிற்சாலை மற்றும் பனியன் கம்பெனிகள் உள்ளதால், பிறமாவட்டம் மற்றும் பிறமாநிலங்களில் இருந்தும் கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன.
இதன் காரணமாக பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் வடசித்தூர்பிரிவில் இருந்து தாசநாயக்கன்பாளையம் வரை குண்டும், குழியுமாக மாறியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வந்தனர். இதையடுத்து பல்வேறு தரப்பினர் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் வடசித்தூர்பிரிவு-தாசநாயக்கன்பாளையம் இடையேயான சாலையை புதுப்பிக்க ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்தனர்.
இதையடுத்து அந்த சாலையை அகலப்படுத்தி, புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிவடையும் என்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.