வனப்பகுதியில் தீப்பிடிப்பதை தடுக்க சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு

0
55

விழிப்புணர்வு

ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்ட பகுதியில் பொள்ளாச்சி, உலாந்தி, மானாம்பள்ளி, வால்பாறை ஆகிய வனச்சரக பகுதிகள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, மான், கரடி உள்ளிட்ட வனவிலங்குகளும், அரிய வகை பறவை மற்றும் தாவர இனங்கள் உள்ளன. இந்த நிலையில் தற்போது மழை இல்லாததால் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது.

இதனால் வனப்பகுதியில் தீப்பிடிப்பதை தடுக்க வனத்துறையினர் ஆழியாறு, சேத்துமடை சோதனைச்சாவடிகளில் சுற்றுலா பயணிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்று தீவிர வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

நடவடிக்கை எடுக்கப்படும்

காட்டுத்தீ இயற்கையாக ஏற்படுவதில்லை. மனிதர்களால் மட்டுமே உருவாக்கப்படுகிறது. தாவர போர்வையாக விளங்கும் காடுகள் எரிந்து சாம்பல் ஆவதால் விலை மதிக்க முடியாத இயற்கை செல்வங்கள் நாசமாவதுடன், மழை அளவு குறைந்து விடுகிறது. வனப்பகுதிக்குள் செல்லும் போது கையில் தீப்பெட்டி அல்லது எளிதில் தீ மற்றும் பொருட்களை எடுத்துக் செல்ல கூடாது. வனப்பகுதிகளை கடக்கும் போது கண்டிப்பாக புகைப்பிடிக்க கூடாது. சுற்றுலா பயணிகள் வாகனங்களை காட்டு பகுதியில் நிறுத்தி சமைப்பதை தவிர்க்க வேண்டும்.

வனப்பகுதியில் தீ ஏற்பட்டால் அதை பரவ விடாமல் தடுத்து வனத்துறைக்கு உதவ வேண்டும். வனப்பகுதியை சுற்றியுள்ள விவசாயிகள் தங்களால் வனப்பகுதிக்குள் தீ பரவாமல் தடுத்து கொள்ளவும், வனத்திற்குள் அத்துமீறி நுழையவோ அல்லது தீ வைப்பதை தவிர்க்க வேண்டும். இதை மீறுபவர்கள் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். தீயை பார்த்தால் பொதுமக்கள் கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு தீயை அணைக்கவும், வனச்கரக மற்றும் புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கவும் வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.