வழித்தட ஆக்கிரமிப்பால் வடவள்ளி பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்

0
69

காட்டு யானைகள் முகாம்

கோவை வனச்சரகம் அட்டுக்கல் வனப்பகுதியில் இருந்து நேற்று அதிகாலை 4 யானைகள் ஒரு குட்டியுடன் வடவள்ளி அருகே கெம்பனூர் பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்தன. தொடர்ந்து அந்த யானைகள் கதிரேசன் என்பவருடைய தோட்டத்தில் முகாமிட்டு கொண்டிருந்தன. இதனை காலையில் தோட்ட வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் பார்த்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆனால் நீண்ட நேரமாகியும் வனத்துறையினர் வரவில்லை என்று கூறப்பபடுகிறது. இதனால் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சத்தம் எழுப்பி காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் போக்கு காட்டியது.

பொதுமக்கள் பீதி

இதையடுத்து 9 மணியளவில் காட்டு யானைகள் அட்டுக்கல் வனப்பகுதியை நோக்கி சென்றது. திடீரென அந்த யானைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் அந்த பகுதியில் முகாமிட்டு வருகின்றன. இந்த யானகைள் குடியிருப்புக்குள் புகுந்து விடுமோ என்றுஅந்த பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.மேலும் காட்டு யானைகளை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து, அவற்றை வனப்பகுதிக்குள் விரட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வழி தெரியாமல் சுற்றித்திரிகிறது

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் தண்ணீர் மற்றும் உணவுத்தேடி காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வருகின்றன. இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தாளியூர் பகுதியிக்குள் நுழைந்த காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் சுற்றித்திரிந்தன.

தற்போது கெம்பனூர், தாளியூர், ஓணாப்பாளையம் பகுதியில் குடியிருப்புகள் அதிகரித்து உள்ளது. மதில் சுவர்கள் கட்டி யானை வழித்தடத்தை சிலர் ஆக்கிரமித்து இருப்பதும் தெரியவந்தது. இதனால் வனத்தில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் வரும் காட்டு யானைகள் மீண்டும் வனத்திற்குள் செல்ல வழி தெரியாமல் தவித்து வருவது வாடிக்கையாக உள்ளது. எனவே யானைகளின் வழித்தடத்தை மீட்க வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.