டீசல் என்ஜின் மூலம் மலை ரெயில் இயக்கம்

0
60

மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே முதன் முறையாக டீசல் என்ஜின் மூலம் மலைரெயில் இயக்கப்பட்டது. இதனை தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங், சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் கவுதம் சீனிவாஸ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

மலைரெயில்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை பர்னஸ் ஆயில் மூலம் மலைரெயில் இயக்கப்பட்டு வந்தது. குன்னூர்-ஊட்டி இடையே டீசல் என்ஜின் மூலம் மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. பர்னஸ் ஆயிலால் மலைரெயிலை இயக்குவதால் அதிகளவில் மாசு ஏற்படுவதாக கூறி, அதனை மாற்ற மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டு இருந்தது.

இதையடுத்து பர்னஸ் ஆயிலுக்கு பதிலாக டீசல் என்ஜினாக மாற்றிமைக்கும் முயற்சியில் ரெயில்வே அதிகாரிகள் ஈடுபட்டனர். இதன்படி பர்னஸ் ஆயில் என்ஜின், டீசல் என்ஜினாக மாற்றப்பட்டு மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே இயக்கப்பட்டு வருகிறது.

டீசல் என்ஜின்

இந்த நிலையில் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே இயக்கப்பட்ட பர்னஸ் ஆயில் என்ஜின் திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் பழுது நீக்கப்பட்டு, குன்னூர் ரெயில்வே பணிமனையில் டீசல் நீராவி என்ஜினாக மாற்றி வடிவமைக்கப்பட்டது. இதையடுத்து மாற்றிவடிவமைக்கப்பட்ட டீசல் என்ஜின் மலை ரெயிலில் இணைக்கப்பட்டு மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே நேற்று இயக்கப்பட்டது.

இந்த சேவையை தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங், சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் கவுதம் சீனிவாஸ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் சீனியர் டிவிஷனல் கமர்சியல் மேலாளர் ஹரிகிருஷ்ணா மற்றும் ரெயில்வே துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆய்வு

முன்னதாக மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்துக்கு வந்த தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்கை சேலம் கோட்ட மேலாளர் கவுதம் சீனிவாஸ் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் வரவேற்றனர். இதையடுத்து ஆர்.என்.சிங். ரெயில் நிலையத்தில் ஆய்வு செய்தார். தொடர்ந்து வளாகத்தில் கட்டப்பட்டுள்ள மேம்பால நடைபாதையை பார்வையிட்டார். பின்னர் புதிதாக கட்டப்பட்ட பிரேக்ஸ்மேன் ஓய்வறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அதன்பின்னர் தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் மற்றும் உயர் அதிகாரிகள் சிறப்பு ரெயிலில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு புறப்பட்டு சென்றனர்.

அப்போது செல்லும் வழியில் கல்லாறு அடர்லி, ஹில்குரோவ், குன்னூர் ஆகிய மலைப்பாதையில் உள்ள ரெயில் நிலையங்களில் ஆய்வு பணியை மேற்கொண்டார்கள்.