கோவைக்கு காரில் 110 கிலோ கஞ்சா கடத்தி வந்த பெண் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை

0
135
கோவை:

கோவைக்கு ஒரு கும்பல் காரில் கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் பீளமேடு இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் கொடிசியா சாலையில் வாகன சோதனை நடத்தினர்.

அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் 110 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர்.

காரில் இருந்த பெண் உள்பட 3 பேரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அவர்கள் மதுரை மாவட்டம் முத்துபட்டி பகுதியை சேர்ந்த ஈஸ்வரி (வயது 46), சக்திவேல்(49), திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை சேர்ந்த கார் டிரைவர் அசோக்(31) என்பது தெரிய வந்தது.

ஈஸ்வரி, சக்திவேல் மீது மதுரையில் கஞ்சா வழக்குகள் உள்ளன. இவர்கள் சமீப காலமாக ஆந்திராவில் இருந்து குறைந்த விலைக்கு கஞ்சா மூட்டைகளை வாங்கி காரில் கடத்தி வந்து கோவையில் புரோக்கர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து லட்சக் கணக்கில் சம்பாதித்ததாக வாக்குமூலம் அளித்தனர்.

தொடர்ந்து நடந்த விசாரணையில் இவர்களிடம் கஞ்சா மூட்டைகளை வாங்கிய புரோக்கர்கள் பற்றிய விவரங்கள் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து புரோக்கர்களான கோவை சிங்காநல்லூரை சேர்ந்த முகமது ரபிக்(23), கோகுல் கண்ணன்(23), ஆவாரம்பாளையத்தை சேர்ந்த தினேஷ் பாபு(24), பிரவீன்(24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் கஞ்சாவை வாங்கி சிறு, சிறு பொட்டலங்களாக பிரித்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டனர். இவர்களிடம் இருந்து கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய கார், மொபட், செல்போன், ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த கும்பலுடன் தொடர்பில் இருந்த முத்துலட்சுமி, சக்திவேல், முஜிபர் ரகுமான் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.