இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மாற்றுத்திறனாளி
வால்பாறை அருகே உள்ள ேலாயர் பாரளை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 43). மாற்றுத்திறனாளி. நடக்க முடியாத நிலையில் உள்ள இவர் தனது அக்கா பழனியம்மாள் வீட்டில் வசித்து வந்தார். மேலும் மாரிமுத்து ஊன்றுகோல் உதவியுடன் அருகில் உள்ள பகுதிகளுக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் தனது வீட்டில் இருந்து ரொட்டிகடை பழைய வால்பாறை செல்லும் சாலையில் உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்தார். லோயர்பாரளை எஸ்டேட் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து கூட்டமாக பறந்து வந்த மலைத்தேனீக்கள் மாரிமுத்துவை கொட்டியது.
மலைத்தேனீக்கள் கொட்டியதில் சாவு
இதில் வலி தாங்க முடியாமல் துடித்த மாரிமுத்து பள்ளியின் அருகே மயங்கி விழுந்தார். இதனைக்கண்ட ஊராட்சி ஒன்றிய பள்ளியின் தலைமையாசிரியை, மாணவ-மாணவிகளை வகுப்பறைக்குள் பாதுகாப்பாக இருக்க செய்தார். தொடர்ந்து தேனீக்கள் பறந்து சென்ற பிறகு வந்து பார்த்த போது மாரிமுத்து மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து அங்கு வந்த ஆம்புலன்ஸ், பணியாளர்கள் அவரை பரிசோதனை செய்தனர். அப்போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
பிரேத பரிசோதனை
இதுகுறித்து தகவலறிந்த வால்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாரிமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர். லோயர் பாரளை எஸ்டேட் பகுதியில் மாற்றுத்திறனாளி ஒருவர் மலைத்தேனீக்கள் கொட்டியதில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.