எலுமிச்சை பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிப்பு

0
82

பொள்ளாச்சி அருகே ஏரிப்பட்டி அரசு பள்ளியில் எலுமிச்சை பழத்தில் இருந்து மின்சாரம் தயாரித்து காண்பித்து மாணவர்கள் அசத்தினர்.

அறிவியல் சோதனைகள்

பொள்ளாச்சி அருகே உள்ள ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வானவில் மன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளித்தலைமை ஆசிரியை சுகந்தி தலைமை தாங்கினார். விழாவில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அறிவியல் சோதனைகளை கருத்தாளர் சங்கீதா செய்து காட்டினார்.

மாய எழுத்துகள், குதிக்கும் பந்து, பெர்னோலிஸ் தத்துவம், நீரின் மட்டம், மாய முட்டை, அமில கார தர சோதனை, இயற்கை நிறங்காட்டிகள், எலுமிச்சை பழத்தில் மின்சாரம் தயாரித்தல், தகடுகளை தூய்மை படுத்தல் போன்ற சோதனைகளை செய்து காட்டினர்.

அன்றாட வாழ்வில் மேற்கண்ட சோதனைகள் எங்கெல்லாம் பயன்படுகின்றன என்று அறிவியல் பட்டதாரி ஆசிரியை கீதா விளக்கினார். மேலும் எரிவதற்கு ஆக்சிஜன் தேவை, தீயணைப்பான் பயன்பாடுகள் குறித்து மாணவர்களுடன் செய்து காட்டி விளக்கம் அளிக்கப்பட்டது. இறுதியாக மாணவர்கள் குழுவாக பிரித்து அமில கார தர சோதனை, இயற்கை நிறங்காட்டி போன்றவற்றை மாணவர்களே செய்தனர்.

மின்சாரம் தயாரிப்பு

மேலும் 2 அல்லது அதற்கு மேற்பட்ட எலுமிச்சை பழங்களை எடுத்துக் கொண்டு அதில் தாமிரம் மற்றும் துத்தநாக தகடுகளை இணைத்து எதிர் மின்வாய், நேர் மின்வாய் மின் இணைப்பு கம்பியுடன் சேர்த்து எல்.இ.டி. பல்புகளை ஒளிர வைத்தனர். உருளை கிழங்கு, தக்காளி, ஆப்பிள் பழங்களை கொண்டும் மின்சாரம் தயாரிக்கலாம். பேட்டரிக்கு பதிலாக பழங்களை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க முடியும். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், தக்காளியில் உள்ள ஆக்சாலிக் அமிலம் ஆகியவை மின் கலனாக செயல்படுகிறது. இது எலுமிச்சை மின் கலன் எனப்படுகிறது என்று மாணவர்களுக்கு செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

இதற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் மலையாண்டிசாமி வழிகாட்டினார். இதில் 50 மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களின் கேள்விகள், பதில்கள் பதிவு செய்யப்பட்டது. மேலும் 10 வகையான சோதனைகளை மாநில ஒருங்கிணைப்பாளர் புகைப்படம் எடுத்து பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பப்பட உள்ளதாக தெரிவித்தார். இதில் ஆசிரியைகள் சுப்புலட்சுமி, ராணி, சுசீலா, சாஜிதாபானு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.