புதுமை பெண் திட்டத்தில் 1,099 மாணவிகளுக்கு உதவித்தொகை

0
100

புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் 1,099 மாணவிகளுக்கு தலா ரூ.1,000 கல்வி உதவித்தொகையை கலெக்டர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்.

புதுமைப்பெண் திட்டம்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் கோவையில் முதற்கட்டமாக 5,026 மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கோவையில் தங்களுக்கும் உதவித்தொகை வழங்க கோரி 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இந்த விண்ணப்பங்களை அரசு அதிகாரிகள் பரிசீலித்து வந்தனர்.

உதவித்தொகை

இந்த நிலையில் 2-ம் கட்டமாக மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து கோவை மாவட்டத்தை சேர்ந்த மாணவிகளுக்கு 2-ம் கட்ட உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர்கிராந்தி குமார் பாடி கலந்து கொண்டு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் 1,099 மாணவிகளுக்கு உதவித்தொகையினை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலெட்சுமி, கல்லூரிக்கல்வி இணை இயக்குனர் கலைச்செல்வி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கவுசல்யாதேவி, கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) பண்டரிநாதன், மாவட்ட சமூக நல அலுவலர் ஆண்டாள், மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் தெய்வானை தமிழ்மறை உள்பட பலர் கலந்து கொண்டனர்.